கம்போங் மானிஸ் பகுதியில் கடல் நீர் மட்டம் 3மீட்டர் ஏற்றம் கண்டு திடிரென்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த கடல் ஓரங்களில் வாழும் 12 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொறுப்பற்ற சில தரப்பினரால் பருவமழை வடிக்கால்களில் குப்பைக்கூளங்கள் வீசியதால் அங்கு பொருத்தப்பட்ட வெள்ள நிவாரண நீர் கதவு(flash gate) சரிவர இயங்க முடியாமல் வெள்ளம் ஏற்பட்டது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் திரு டேவிட் மார்ஷல்.
பாசன மற்றும் வடிக்கால் துறை (ஜே.பி.எஸ்) கடந்த 2014-ஆம் ஆண்டு இப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு வெள்ள நிவாரண நீர் கதவு பொருத்தியது. அன்று முதல் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார் திரு டேவிட். பிறை ஆற்றோரங்களில் நேற்று(5 ஜூன் 2016) திடிரென்று வெள்ளம் ஏற்பட்டதற்கு சில தரப்பினரால் ஆற்றில் வீசப்பட்ட குப்பை கூளங்கள் தான் காரணம் என சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து திரு டேவிட் ஜே.பி.எஸ் துறையிடம் கூடிய விரைவில் மீண்டும் அந்த வெள்ள நிவாரண கதவை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். எதிர்காலத்தில் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படாமல் இருப்பதை தவிப்பதற்கு ஜே.பி.எஸ் துறையிடம் செபராங் பிறை நகராண்மைக் கழகம் கூடுதல் நிதி ஒதுக்கீடுக் கேட்டுள்ளது. இதன் மூலம் பிறை ஆற்றோர பகுதி முழுவதிலும் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். எனினும் இத்திட்டத்திற்கு பல லட்சம் பணம் தேவைப்படும் என்றார்.
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி சம்பவ நடத்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வெள்ள பிரச்சனைத் தீர்ப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிறை சமூக முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு தலைவர் திரு ஶ்ரீ சங்கரன் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் திரு சத்திஸ் முனியாண்டியும் உடன் வருகையளித்தனர்.