கம்போங் மானீஸ் மறு மேம்பாட்டுத் திட்டத்திற்கு குடிமக்கள் வரவேற்பு

Admin

பிறை – பல ஆண்டுக் காலமாக கம்போங் மானீஸ் குடியிருப்பாளர்கள் தங்களுக்கென சொந்த வீடு பெற வேண்டும் என 289க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில், பிறை சட்டமன்ற உறுப்பினரும் வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜூ, இந்தக் கிராமத்தை மறு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ள தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

கம்போங் மானீஸ் குடியிருப்பாளர்கள் முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்கள் மேற்கொண்ட நேர்காணலின் போது, இந்தப் புதிய வீடமைப்புத் திட்டம் கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தனர். இந்த வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டமானது அவர்களுக்கானப் புதிய விடியலைத் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கே.சாந்தாதேவி

கடந்த 48 ஆண்டுகளாக கம்போங் மானீஸில் வசிக்கும் கே.சாந்தாதேவி அவர்கள், உள்ளூர்வாசிகளுக்கு சிறந்த சூழலை வழங்கக்கூடிய மறு மேம்பாட்டுத் திட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார்.

எனினும், இத்திட்டமிடப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்தில் இங்கு வசிக்கும் நிரந்திர குடியிருப்பாளர்களுக்கு வீடுகளை இலவசமாக வழங்குவது போன்ற சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டும், என்றார்.

“ஏனென்றால், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இங்கு நீண்ட காலமாக வசித்து வருகிறார்கள், எங்களில் சிலர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறோம். எனவே, ரயில்வே அசெட் கார்ப்பரேஷன் (ஆர்.ஏ.சி) இம்மாதிரியான சலுகைகளை வழங்க முன் வர வேண்டும்,” என்ற ஆவலை வெளிப்படுத்தினார்.

முழுநேர இல்லத்தரசியான அவர், மிகவும் ஏழ்மையான மற்றும் குறைந்த பொது வசதிகள் கொண்ட கம்போங் மானீஸின் சுற்றுச்சூழல், குடியிருப்பாளர்களின் நலனுக்காக கண்டிப்பாக மறு மேம்பாட்டித் திட்டம் தேவை என்று கூறினார்.

“அதுமட்டுமின்றி, இந்நிலம் சம்பந்தப்பட்ட தரப்பினர் எங்களை இந்த இடத்தை விட்ட மாற்றலாகிச் செல்லுமாறு அறிவுறுத்தி பல முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், இந்தப் புதிய மேம்பாட்டுத் திட்டம் நிறைவேற்றினால், குடிமக்களாகிய நாங்கள் மிகவும் நிம்மதியாக உணர்வோம்,” என்று அவர் கூறினார்.

சாந்தாதேவி கூறுகையில், கம்போங் மானீஸ் சுற்றுச்சூழல் குறிப்பாக வடிகால் வசதி இல்லாததால், கனமழைப் பெய்யும் வேளையில், அடிக்கடி வெள்ளப் பிரச்னையை குடியிருப்புவாசிகள் சந்திக்க நேரிடுகிறது.

“இது வெள்ளப் பிரச்சனை மட்டுமல்ல, குறிப்பாக மழைக் காலங்களில் பாம்பு, தேள் மற்றும் பிற விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தலையும் நாங்கள் அடிக்கடி எதிர்கொள்கிறோம்.

“இந்த கம்போங் மானீஸ் குடியிருப்புப் பகுதி பல ஆண்டுகளாக உள்ளது, எனவே, மாநில அரசாங்கத்தின் மறு மேம்பாட்டுத் திட்டத்தை முழு மனதாக வரவேற்கிறோம்.


அதேவேளையில், இந்த மறு மேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாக அமலாக்கம் கண்டால், பிறந்தது முதல் கம்போங் மானீஸில் வசிக்கும் 67 வயதான எம்.ராஜாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

“நாங்கள் நீண்ட காலமாக இங்கு வசிக்கிறோம், ஆனால் இன்னும் சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை….எனக்கு இப்போது வயதாகிவிட்டது, இனி புதிய வீடு வாங்கவும் முடியாது.

“எனவே, இந்த மறு மேம்பாட்டுத் திட்டமானது எனக்கும் எனது குடும்பத்திற்கும் எங்கள் சொந்த வீட்டைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பாக நான் கருதுகிறேன்.

“நான் மாநில அரசாங்கத்திற்கு, குறிப்பாக பத்து காவான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் நோய்வாய்ப்பட்ட கணவருக்கு (நிதியுதவி மற்றும் சக்கர நாற்காலி) உதவியதற்கு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன்.

கோ.கிருஷ்ணவேணி

கோ.கிருஷ்ணவேணி,55 என்பவர் பிறந்தது முதல் கம்போங் மானீஸில் வசித்து வருகிறார்.
இங்கு வாழும் மக்கள் ஏழ்மையால் ஒடுக்கப்படுவதைத் தவிர, முறையான வடிகால் அமைப்பில்லாததால் திடீர் வெள்ளப் பிரச்சனையையும் அடிக்கடி எதிர்கொள்கின்றனர் என்று அவர் கூறினார்.

“பல குடியிருப்பாளர்கள் வெளியேறிவிட்ட சூழலில், கைவிடப்பட்ட வீடுகள் பாழடைந்து குப்பைக் கிடங்குகளாகவும், பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களின் வாழ்விடமாகவும் மாறியுள்ளன.

“உண்மையில், இங்குள்ள குடியிருப்புப் பகுதியில் முறையான வாகன நிறுத்த இடமும் இல்லை. எனவே, தூரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குப் பாதுகாப்பும் இல்லை. சில சமயங்களில், கார் டயார் பழுதாக்குதல், காரை கீருதல் போன்ற அசம்பாவிதங்களும் ஏற்படுகிறத.

“எனவே, கம்போங் மானிஸின் முன்மொழியப்பட்ட மேம்பாட்டுத் திட்டம் உள்ளூர்வாசிகளிடமிருந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.

“வீடுகள் தவிர, மாநில அரசு வணிக இட வசதிகளையும் வழங்க வேண்டும் என்று நம்புகிறோம், இதன் மூலம் ஒரு புதிய வீட்டைப் பெற்ற பிறகு எங்கள் குடும்பங்களை ஆதரிக்க வணிகமும் செய்யலாம்,” என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.