பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களின் பொற்கரத்தால் பஞ்சாபி பள்ளி புதிய கட்டிடம் மற்றும் மண்டபம் திறப்பு விழாக் கண்டது. இத்திறப்பு விழா கடந்த 3/8/2014-ஆம் நாள் இனிதே வாடா குருத்வாரா சாஹிப் தளத்தில் நடைபெற்றது. பினாங்கு மாநிலத்தின் முதல் பஞ்சாபி பள்ளியாக கல்சா தர்மிக் பள்ளித் திகழ்கிறது. இப்பள்ளி கடந்த 1937-ஆம் ஆண்டு மலாக்கா ஸ்ட்ரீட் எனும் பகுதியில் நிறுவப்பட்டு 1957-ஆம் ஆண்டு வாடா குருத்வாரா சாஹிப் வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த கல்சா தர்மிக் பஞ்சாபி பள்ளியின் நோக்கமானது சீக்கியர்கள் தங்களின் தாய்மொழியானப் பஞ்சாபி மொழியைக் கற்றுக்கொள்வதும்; மலேசிய கல்வி சான்றிதழ் தேர்வில் இடம்பெறும் “Senior Cambridge Exams” எனும் தேர்வை எழுதுவது ஆகும்.
தொடக்கக் காலத்தில் இந்த கல்சா தர்மிக் பஞ்சாப் பள்ளி சீக்கியர்கள் மற்றும் பொது மக்களின் நன்கொடையில் நிர்வகிக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு தொடங்கி மலேசிய கல்சா திவான் மற்றும் பஞ்சாபி கல்வி அறக்கட்டளை இணைந்து மலேசிய கல்வி அமைச்சின் உதவியோடு நாடு தழுவிய நிலையில் கூட்டரசு அரசி நிதி உதவியோடு பஞ்சாப் பள்ளி செயற்பட்டது. கல்வி அமைச்சு நிதியுதவி வழங்கினாலும் கல்சா தர்மிக் பள்ளியை நிர்வகிப்பதில் பணச் சிக்கல் எதிர்கொள்ளப்பட்டது.
மாநில அரசு பஞ்சாப் பள்ளி அவலநிலையை அறிந்து 2010-ஆம் ஆண்டு தொடங்கி 2014-ஆம் ஆண்டு வரை நிதியுதவி வழங்குவது பாராட்டக்குறியதாகும். இந்தப் பள்ளிக்கு மட்டுமின்றி பினாங்கு மாநில பாயான் பாரு மற்றும் பட்டர்வொர்த் எனும் இடத்தில் இயக்கி வரும் 2 பஞ்சாப் பள்ளிகளுக்கும் இந்த நிதி உதவி கொடுக்கப்படுகிறது.
பினாங்கு மாநில சீக்கியர் இனத்தவரின் உரிமைகளையும் மதிக்கத்தக்க வகையில் மக்கள் கூட்டணி அரசு கல்சா தர்மிக் பஞ்சாபி பள்ளிக்கு ரிம40,000 (ரிம25,000 கல்சா தர்மிக் பள்ளிக்கும் ரிம15,000 பாயான் பாருவில் அமைந்திருக்கும் இப்பள்ளியின் மற்றுமொரு கிளைக் கல்வி மையம் கொடுக்கப்படும்). அதேவேளையில் பட்டவொர்த் பஞ்சாபி கல்வி மையத்திற்கு ரிம25,000 மானியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான மானியம் கடந்த 14/5/2014-ஆம் நாள் கொம்தார் அரங்கில் வழங்கப்பட்டது.
மாணவர்களின் எண்ணிக்கை கல்சா தர்மிக் பள்ளியில் 78-ஆகவும் பாயான் பாரு மையத்தில் 38-ஆகவும் அதிகரித்த நிலையில் இப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் நிர்மாணிக்கும் சூழல் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. எனவே, 2012-ஆம் ஆண்டு வைசாக்கி பெருநாளில் கலந்து கொண்ட மாநில முதல்வர் இப்பள்ளியின் புதிய கட்டிடம் நிர்மாணிப்பதற்கு ரிம50,000 மானியமாக வழங்கினார். அன்றைய தினம் மறைந்த நமது புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கர்பால் சிங் அவர்கள் கலந்து கொண்டு இப்பள்ளியின் வளாகத்தில் தாம் வளர்ந்ததாகவும், இப்பள்ளியின் புதிய கட்டிடம் காண்பதற்கு ஆவலாக இருப்பதாகக் கூறியதை மாநில முதல்வர் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார். ஜெலுந்தோங் புலியாக வலம் வந்த அமரர் திரு கர்பால் சிங்கின் சேவையை நினைவுக்கூறும் வகையில் அப்பள்ளியின் அரங்கத்திற்கு கர்பால் சிங் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டது.
கல்சா தர்மிக் பஞ்சாப் பள்ளியின் புதிய கட்டிடத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த மாநில முதல்வர் அப்புதிய கட்டிட நிர்மாணிப்புக்கு உதவும் வகையில் ரிம180,000 மானியம் வழங்கியது சாலச்சிறந்ததாகும். சீக்கியர்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிப் பெற தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார் மாநில முதல்வர்.
இந்நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர், திரு கர்பால் துணைவியார் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.