2008-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் அமர்ந்துள்ள மக்கள் நலன் பேணும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசால் பல தங்கத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நேர்மையான ஆட்சியின் மூலம் வரவு செலவு கணக்கில் கிடைக்கப்பெற்ற மாநில அரசின் மிகை நிதியைக் கொண்டு பினாங்கு மக்களுக்கு உதவும் வண்ணம் இத்தங்கத் திட்டங்களின் வழி நிதியுதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. எனினும், இந்நிதியுதவிகளைப் பெறுவதில் பினாங்கு இந்திய மக்கள் குறிப்பாகக் கிராமப்புற மக்கள் பிந்தங்கியுள்ளனர் என்றும் உடனே தகுதியுள்ள தங்கத் திட்டங்களில் பினாங்கு வாழ் இந்திய மக்கள் தங்களைப் பதிந்து கொள்ளுமாறும் பினாங்கு செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் திரு.செ.குணாளன் பணிவன்புடன் கேட்டுக் கொண்டார்.
மூத்த குடிமக்கள் திட்டம், தனித்து வாழும் தாய்மார்கள் திட்டம், தங்க மாணவர்கள் திட்டம், உடல் ஊனமுற்றோர்கள் திட்டம் ஆகிய திட்டங்களின் வழி ஆண்டுதோறும் மாநில அரசு தகுதியானவர்களுக்கு ரிம100 உதவித்தொகை வழங்குகிறது. அதுமட்டுமல்லாது, 2011-ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கக் குழந்தைகள் திட்டத்தின் மூலம் ரிம200 வழங்கப்படுகிறது. இத்திட்டங்களைப் பற்றிய மேல் தகவல்களை பெற http://isejahtera.penang.gov.my என்னும் இணைய தளத்தை வலம் வரலாம். இத்திட்டங்களின் அடிப்படை விண்ணப்ப நிபந்தனை தாங்கள் பினாங்கு மாநிலத்தின் பதிவு பெற்ற வாக்காளர்களாக இருத்தல் வேண்டும்.
இவற்றைத் தவிர அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் தங்களின் பட்டயம் ‘Diploma’ மற்றும் இளங்கலை ‘Degree’ படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அரசு ரிம1000 நிதியுதவி வழங்குகிறது. முந்தைய அரசு இம்மாணவர்களுக்கு ரிம500 மட்டுமே வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே தகுதியுடைய மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளபடுகின்றனர். இதற்கான விண்ணப்ப பாரத்தை http://ibita.penang.gov.my என்னும் இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத் தவிர்த்து, மாண்புமிகு பினாங்கு இரண்டாம் முதல்வர் பேராசிரியர் இராமசாமி தலைமையில் செயற்படும் இந்து அறப்பணி வாரியம், ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வி மேற்கொள்ளும் வசதி குறைந்த மாணவர்களுக்குக் கல்வி உபகார நிதி வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பினாங்கு மாநில அரசு மூத்த குடிமக்களின் சேவையை என்றுமே அங்கிகரிக்க தவறியதில்லை. அதுபோல், அவர்கள் இறந்தபின்னும் அவர்களுடைய இறுதிச்சடங்கு தங்கு தடையின்றி நடைபெற்று அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வழிவகை செய்யும் வகையில் இறுதிச் சடங்கு செலவினத்தைக் குறைக்க மூத்த குடிமக்களின் வாரிசுகளுக்கு ரிம1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. அவை மட்டுமல்லாது அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் வழி ரிம770க்கு கீழ் வருமானம் பெறும் குடும்பத் தலைவர்களுக்கு கூடுதல் உதவிநிதி வழங்கப்படும். எடுத்துக்காட்டாக ரிம500 மாத வருமானம் பெறும் ஒரு குடும்பத்திற்கு மாநில அரசு ரிம270 உதவித் தொகையை மாதந்தோறும் வழங்கி அக்குடும்பம் வறுமைக் கோட்டிற்கு மேல் மாத வருமானம் பெறுவதை உறுதி செய்யும்.
மேலும் ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கொப்ப இத்திட்டங்களின்வழி பயன்பெற்றவர்கள் இத்திட்டங்களைப் பற்றி அறியாத நம்மவர்களுக்கு இந்தத் தகவலைப் பரப்பும்படி அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்திட்டங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட இணையத்தளங்களை நாடியும் எங்கள் முத்துச் செய்திகள் இதழில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு தொகுதியின் சிறப்பு அதிகாரிகளைக் கைப்பேசி எண் வாயிலாகத் தொடர்பு கொண்டும் மேற்தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பினாங்கு வாழ் இந்திய மக்கள், மாநில அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பைத் தவற விடாமல் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திலோ, மக்கள் சேவை மையத்திலோ, பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டுச் செயற்குழுவிடமோ சென்று தகுதியான தங்கத் திட்டங்களில் பதிந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலம் தாழ்த்தாமல் இன்றே செயற்படுங்கள்;
தங்கத் திட்டங்களில் பதிய முற்படுங்கள்!!!