கிரின்லன் ஹைட்ஸ் வீடமைப்புப் பகுதியில் வாழும் 1000 குடியிருப்பாளர்கள் நன்மைப் பெறும் பொருட்டு மூன்று புதிய மின் தூக்கி பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய மின் தூக்கி கிரின்லன் ஹைட்ஸ் ‘எச்’ கட்டிடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால், ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் மூவரும் இணைந்து மின் தூக்கியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.
இந்த மின் தூக்கியை நிர்மாணிக்க புக்கிட் குளுகோர் நாடாளுமன்றம் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்றம் நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டது என செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் திரு ஜெக்டிப் சிங். இந்த நிர்மாணிப்புப் பணிக்கு ரிம340,260 செலவிடப்பட்டது. மேலும் பினாங்கு மாநிலத்தில் குறைந்த மற்றும் நடுத்தர விலை வீடமைப்புப் பகுதிகளில் மின் தூக்கிகள் பராமரிக்கும் பணி மாநில அரசாங்கத்தின் தலையாய கடமை என சூளுரைத்தார்.
இப்பகுதி குடியிருப்பாளர்கள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் பொது உடைமைகள் பாதுகாக்கப்படும் என்றார். பினாங்கில் தற்போது 14 குறைந்த, நடுத்தர மற்றும் மலிவு விலை வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் 26,255 யூனிட் வீடுகள் கட்டப்படுவதோடு பொது மக்களுக்குச் சொந்த வீடு வாங்கும் கனவு மெய்ப்பிக்கப்படும். இதுமட்டுமின்றி பினாங்கில் பல வீடமைப்புத் திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு கூடுதலாக 38,000 யூனிட் வீடுகள் கட்டப்படும் எனத் தெரிவித்தார். மாநிலத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைச் சமாளிக்க வீடமைப்புத் திட்டங்கள் அவசியம் எனக் கூறினார்