செபராங் ஜெயா – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பட்டர்வொர்த், குருத்வாரா சாயிப் ஆலயத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து அந்த ஆலயத்தின் மேம்பாட்டுப்பணிக்கு ரிம100,000 மானியமாக வழங்குவதாக அறிவித்தார். இந்த ஆலயத்தை திறந்து வைப்பதில் பெருமைகொள்வதோடு நிர்வாகக்குழு, அறங்காவலர்கள், பக்தர்கள் ஆகியோரின் கடுமையான உழைப்பால் இது சாத்தியமானது என புகழ்மாலை சூட்டினார்.
குருத்வாரா ஆலயம் இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டு தலத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டது. இப்புதிய குருத்வாரா ஆலயம் கட்டுமானத்திற்கு ரிம6 மில்லியன் செலவிடப்பட்டது.
இந்த குருத்வாரா பினாங்கு வாழ் சீக்கியர்கள் மட்டுமின்றி வட மலேசிய சீக்கியர்களுக்குப் பெருமிதம் அளிக்கும் வகையில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது என முதல்வர் தெரிவித்தார்.
“நெருக்கம் என்றும் வலுவான உறவை உருவாக்கும் என நம்பிக்கைக் கொள்வேன். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் எனக் கூறி குருத்வாரா ஆலய கட்டட நிதிக்கு ரிம100,000 வழங்குவதாக அறிவித்தார்.
உள்ளூராட்சி, வீடமைப்புத் திட்டமிடல், நகர்புற மற்றும் கிராமப்புற நல்வாழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தனது நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரிம20,000 கொடுப்பதாகக் கூறினார். மேலும், இவ்வாலயத்தில் மின்தூக்கி பொருத்தும் பொருட்டு குருத்வாரா நிர்வாக உறுப்பினர்களை இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தல நிதியத்திற்கு (ரிபி) விண்ணப்பிக்கக் கடிதம் அனுப்ப வலியுறுத்தினார்.
இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் மேம்பாட்டுத் திட்டம், பழுதுப்பார்த்தல் அல்லது நிர்மாணிப்புப்பணிக்காக ரிம50,000 வரை ரிபி நிதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். “இந்த குருத்வாரா மின்தூக்கி திட்டத்தை நான் கவனத்தில் கொள்கிறேன்; பினாங்கு மாநில அரசு அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் செவிமடுக்கும்“, என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் புதிய குருத்வாரா நிர்மாணிப்பு சீக்கியர்களுக்கு மைல்கல்லாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் சிங் டியோ. பட்டர்வொர்த், குருத்வாரா சாயிப் நிர்வாகத் தலைவர் நரேந்திர சிங் குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார். இந்த குருத்வாரா நிர்மாணிப்பு நான்கு ஆண்டு காலதவணையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொண்டு நிறைவுப்பெற்றது பாராட்டக்குரியதாகும்.
“இந்த நிலம் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது. தொடக்கத்தில், பினாங்கு மாநில அரசு இம்மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரிம180,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது; மேலும் இத்திட்டம் வெற்றியடைய செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் நரேந்திர சிங்.