ஜார்ச்டவுன்- மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் வாடா குருத்வாரா சாயிப் ஆலயத்தின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணித் திட்டத்திற்காக நிதி திரட்டும் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.
120 ஆண்டுகள் வரலாற்றுப் புகழ் பெற்ற இவ்வாலயம் மலேசியாவிலே போர்ட் கொர்னிவாலிஸ் தலத்தில் நிர்மாணிக்கப்பட்ட சீக்கியர்களின் முதல் ஆலயமாக விளங்குகிறது.
இந்த வரலாற்று புகழ் மிக்க ஆலயத்தின் மறுச்சீரமைப்புப் பணிக்கு ஏறக்குறைய ரிம 2.5 முதல் 3 மில்லியன் வரை நிதித் தேவைப்படுவதாகவும் 24 மாதங்களில் இந்நிர்மாணிப்புப் பணி நிறைவுப்பெறுவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய், வாடா குருத்வாரா சாயிப் ஆலயத் தலைவர் டல்ஜிட் சிங் மற்றும் பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ இயோ துங் சியாங் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மறுச்சீரமைப்புப் பணி தொடக்கவிழாவில் மாநில அரசு சீக்கியர்களின் இந்த ஆக்கப்பூர்வமானத் திட்டம் வெற்றிப் பெறும் பொருட்டு மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் ரிம200,000-ம், தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்பாக ரிம20,000 நிதி ஒதுக்கீடு வழங்குவதாக சாவ் தெரிவித்தார்.
பொதுவாகவே, சீக்கியர்கள் எதிர்நோக்கும் ஆலயம் மறுச்சீரமைப்புத் திட்டம், நிலம், இடுகாடு ஆகிய பிரச்சனைகளை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ மாநில அரசாங்க கவனத்திற்கு கொண்டு வந்தார். பின்னர், இந்த நிதித் திரட்டும் நிகழ்விற்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில் ரிம70,000 மானியம் வழங்கினார்.
இவ்வாலயத்திற்கு வருகையளிக்கும் பக்தர்கள் கார் நிறுத்துவதற்குச் சிரமத்தை எதிர்நோக்குவதால் கூடிய விரைவில் அதற்கானத் தீர்வுக் காண அரசு துணைபுரிவதோடு மாநகர் கழகக் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என முதல்வர் குறிப்பிட்டார்.