ஜார்ச்டவுன் – ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களால் பினாங்கு மாநிலத்தில் மட்டுமின்றி மலேசிய ரீதியில் தைப்பூச விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும்.
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி அண்மையில் அதிகமான கோவிட்-19 வழக்குகள் பதிவுச்செய்வதாலும் அதன் பரலைத் தடுக்கும் முயற்சியாக இந்த ஆண்டு தைப்பூச விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பொது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.
பொதுவாகவே, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு பால் குடம் எடுத்தல்; காவடி ஏந்துதல்; அன்னதானம் வழங்குதல்; இரத ஊர்வலம்; முடிக் காணிக்கை ஆகிய பாரம்பரிய மிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தடை விதிப்பதாக பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.
“தற்போது மலேசிய சுகாதார அமைச்சின் தரவுப்படி அதிகமான கோவிட்-19 வழக்குப் பதிவுகள் அனைவருக்கும் எச்சரிக்கையை வழங்குகிறது. எனவே, இச்சூழ்நிலையை மிகவும் பாதிப்படையச் செய்யாமல் பொது மக்களின் சுகாதாரக் கூறுகளுக்கு முன்னுரிமை அளிப்பது அனைவரின் கடமையாகும்.
“நாம் அனைத்து முன்வரிசை தரப்பினருடன் குறிப்பாக மலேசிய பாதுகாப்பு மன்றத்துடன் (எம்.கே.என்) ஒத்துழைப்பு நல்கி புதிதாக ‘தைப்பூச தோற்று’ உருவாக்கம் காண கூடாது என்பதனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக,” இன்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இராமசாமி இவ்வாறு கூறினார்.
இந்த ஆண்டு தைப்பூச விழா வருகின்ற ஜனவரி,28-ஆம் இடம்பெறுகிறது. பொதுவாகவே, தைப்பூச விழா இரத ஊர்வலம், பக்தர்கள் நேர்த்திக்கடன் என பாரம்பரிய வைபவங்களுடன் மூன்று நாட்களுக்கு அணுசரிக்கப்படும்.
“பொது மக்கள் வருகின்ற தை மாதம் அதாவது ஜனவரி,14-ஆம் நாள் தொடங்கி 26-ஆம் நாள் வரை பாலதண்டாயுபானி ஆலயத்திற்கு வழிப்பாட்டில் கலந்து கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவர், மாறாக நேர்த்திக்கடன் செலுத்த தடை விதிப்பதாக,” பாலதண்டாயுதபானி ஆலயத் தலைவர் சுப்பிரமணியம் நினைவுறுத்தினார்.
கடந்த ஆண்டுகளில், இத்தைப்பூச விழா தங்க இரதம், வெள்ளி இரத ஊர்வலங்களுடன் தொடங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் ஒன்றுக்கூடுவர்.
“இந்த ஆண்டு ஜனவரி, 27 முதல் 29 வரை பொது மக்கள் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயங்களுக்கு வருகையளிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தைப்பூச விழாவின் அனைத்து பூஜை மற்றும் வழிபாட்டுகள் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் வழிகாட்டலில் நடைபெறும்,” என பேராசிரியர் தெளிவுப்படுத்தினார்.
“பொது மக்கள் வீட்டிலிருந்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும், இந்த கோவிட்-19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பு மிக அவசியம்,” என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் கூறினார்.
மலேசியாவில் 24 இந்து கோயில்களில் தைப்பூச வழிபாடுகள் நடத்த தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்துள்ளது.அதில் பினாங்கு மாநிலத்தை சேர்ந்த அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.