ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19யின் எதிர்காலத் தாக்கத்தை எதிர்நோக்க வேண்டும் என கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலையில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அறிவுறுத்தினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் 24-ஆவது நாளான இன்று அன்றாட வாழ்க்கை சூழல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பொது மக்களிடையே இந்த ஆணை நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக உள்ளது.
“ஆயினும், இக்கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, நாம் அனைவரும் இன்று மாலை நம் நாட்டு பிரதமர் அறிவிப்புக்காக காத்திருப்போம்”, என்றார்.
“அனைவரும் போல், நானும் இந்த கோவிட்-19 பரவல் நம் நாட்டிலும் மாநிலத்திலும்
முறியறிக்கப்பட்டு சுமூகமான சூழ்நிலைக்கு மாறும் என எதிர்ப்பார்க்கிறேன்.
எனினும், மலேசிய சுகாதாரத் துறை முடிவு எடுப்பதற்கு முன்பு அனைத்து கூறுகளையும் ஆராய வேண்டும்.
எம்மாதிரியான, முடிவாக இருப்பினும் நாம் அனைவரும் அதன் எதார்த்தத்தை புரிந்து கொண்டு கோவிட்-19 முழுமையாக துடைத்தொழிக்க போராட வேண்டும்”, என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் சாவ் கோரிக்கை விடுத்தார்.
இந்நடவடிக்கை அனைவரின் பாதுகாப்பை மையமாக கருதி எடுக்கப்படும். பினாங்கு மாநில அரசு இம்மாநில மக்களின் நலனை உறுதிப்படுத்த தொடர்ந்து போராடும்.
ஆகவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாகுபாடின்றி சோர்ந்து போகாமல் தொடர்ந்து கோவிட்-19 எதிர்கொள்ள போராடுவோம்.
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பேசிய சாவ், நீண்டகால தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களின் எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியாது என்றார்.
“உண்மையில், அனைத்துலக வணிகம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் எதிர்காலம் நிலைமையை உறுதிச் செய்ய கடினம் என்றார்.
“உறுதியாக ஒரு சில வணிகங்கள் பொருளாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும், எனவே, தற்போதுள்ள பொருளாதார அமைப்பை மறுசீரமைப்புச் செய்து அவர்களுக்கு மாநில அரசு துணைபுரியும்,” என்று மாநில முதல்வர் கூறினார்.