சங்காட் மிண்டன் பகுதியில் வெள்ள நிவாரணத் திட்டம் நிறைவுக் கண்டது

Admin

பத்து உபான் – சங்காட் மிண்டன் ஜாலான் 6 மற்றும் 7 இல் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் பகுதியில் வடிக்கால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் நிறைவுப்பெற்றதில் மகிழ்ச்சிக் கொள்வார்கள்.

பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்.) மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த மேம்பாட்டுப் பணிகள் சுமார் 3 மாதங்களில் நிறைவடைந்தன.

மலேசிய சாலை பதிவு தகவல் அமைப்பு (Marris) மானியத்தின் கீழ் ரிம500,000 நிதிச் செலவில் மேற்கொள்ளப்பட்டன.

இத்திட்டத்தில் ஜாலான் 6 & ஜாலான் 7 இல் பழுதடைந்த வடிக்காலை 1.5 மீட்டர் அகலம் கொண்ட புதிய pra-tuang (PRECAST)
ரக வடிக்கால் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மேம்படுத்தப்பட்ட வடிக்கால் சுற்றி வேலி அமைக்கும் பணியும் உள்ளடக்கியுள்ளது.

சங்காட் மிண்டன் ஜாலான் 3 இல், வெள்ள நிவாரணப் பணிகள் இதுவரை 80 விழுக்காடு நிறைவடைந்துள்ளது என்று ஜே.கே.ஆர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கானச் செலவு சுமார் ரிம800,000 ஆகும். இதுவும் Marris மானியத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன்; வடகிழக்கு மாவட்ட பொதுப்பணித் துறை பொறியியலாளர் அப்தூர் ரஹ்மான் அஸ்ஸாம் பின் சே சோப்ரி; வடகிழக்கு மாவட்ட அதிகாரி ரொஸ்லி அலிம் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர்
ஆ. குமரேசன் கூறுகையில், பல ஆண்டுகளாக குறிப்பாக மழை பெய்யும் வேளைகளில் ஏற்படும் திடீர் வெள்ளத்தால் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

“நான் பல முறை இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட தரப்பின் கவனத்திற்குக் கொண்டுச் சென்றேன். இறுதியில் இந்த வடிக்கால் அமைப்பை மேம்படுத்தும் திட்டம் நிறைவடைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

“ஜே.கே.ஆர், மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிக்கால் துறை மற்றும் அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று குமரேசன் இன்று மிண்டன் ஹைட்ஸில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

குடியிருப்பாளர்களின் தேவைகளுக்குக் குரல் கொடுத்ததற்காக மாநில முதல்வர் சாவ் கொன் இயோவ், சட்டமன்ற உறுப்பினர் குமரேசனைப் பாராட்டினார்.

“இது மிண்டன் ஹைட்ஸில் மேற்கொள்ளப்படும் முதல் வெள்ள நிவாரணத் திட்டம் அல்ல.

இந்த வெள்ள நிவாரணத் திட்டங்கள் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.