சமயம் பல்லின மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் – இராயர்

Admin

 

தஞ்சோங் பூங்கா- “மலேசியர்கள் பல்லின மக்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கு சமயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து சமயப் போதனைகளும் நமது தினசரி வாழ்க்கையில் சகோதரத்துவம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மற்றும் நன்னெறிப் பண்புகள் பின்பற்றி நல்லிணக்கத்தை மேலோங்க வழி வகிக்கிறது.

“சமயம் என்பது பிளவுக்கான அறிகுறி அல்ல மாறாக ஒற்றுமையின் சின்னம்,” என மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவையின் 45-வது திருமுறை ஓதும் விழாவிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் இவ்வாறு கூறினார்.

மாநில அரசாங்கம் சமயம் மற்றும் சமூகநலன் மிக்க திட்டங்களுக்குத் தொடர்ந்து நல்லாதரவு அளிக்கும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான இராயர் கூறினார்.

மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை சமயம் மட்டுமின்றி பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையிலும் பல நிகழ்ச்சிகள், வகுப்புகள் மற்றும் பட்டறைகள் வழிநடடுத்துவது பாராட்டக்குரியதாகும்.

“நமது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைக்கு ஏற்ப அனைத்துப் பள்ளிகளிலும் சமய வகுப்புகள் நடத்த இணக்கம் கொள்ள வேண்டும். அதேவேளையில், அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் இந்து சமய வகுப்பு கட்டாயப் பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டும்.

“சமய வகுப்பு ஒரு மாணவனை சிறந்த பண்புநெறியுடன் வளர்வதற்குத் துணைபுரிகிறது. அதோடு அவர்கள் தீயப் பழக்கங்களில் இருந்து விடுப்படவும் சமயம் ஒரு திறவுக்கோளாகத் திகழ்கிறது. எனவே, மத்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்,” என்று புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவர் விவேக நாயகன் திரு.தர்மன் தெரிவித்தார்.

இந்து சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் நடத்துவதில் மட்டும் உற்சாகம் கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழ்ந்து இந்து சமயத்தின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும், என்றார்.

இவ்விழாவில், பெற்றோர்கள் உட்பட 1,200 பேர்கள் கலந்து கொண்டனர். தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், பேச்சுப் போட்டி, திருமுறை பதிகப் பாராயணம், பஞ்சபுராணம் என சமயம் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.
பினாங்கு மாநில அளவிலான திருமுறை ஓதும் போட்டியில் 12 வட்டாரப் பேரவையைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்கள் இம்மாநிலத்தைப் பிரதிநிதித்து வருகின்ற செப்டம்பர் 16-ஆம் தேதி பத்து மலையில் நடைபெறும் தேசிய ரீதியிலான திருமுறை ஓதும் போட்டியில் கலந்து கொள்வர்.

இந்து சமயத்தைப் பறைச்சாற்றும் இந்த திருமுறை ஓதும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பங்கேற்பு அதிகரிப்பதைக் கண் கூடாக காண முடிகிறது.

மேலும், மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை ஒவ்வொரு ஆண்டும் சமயம், கல்வி, சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் ஏற்று நடத்துகிறது. இந்தப் பேரவை தொடர்ந்து சமூகத்திற்குச் சேவை ஆற்றுவது சாலச்சிறந்தது.