பிறை – பினாங்கு அரசாங்கம் இம்மாநிலத்தில் மெகா உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதைத் தவிர, பல்வேறு மதங்களைச் சேர்ந்த சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது.
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கம் (PIA), பினாங்கு சிலிக்கான் தீவு மீட்புத் திட்டம், முத்தியாரா LRT திட்டம் மற்றும் ஜூரு-சுங்கை டுவா உயர்மட்டட நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களின் முக்கியத்துவத்தையும் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் வலியுறுத்தினார்.
எனினும், இந்த மாநிலத்தில் மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று செத் சஸ்தான் & இம்பெர்ட் தேவாலயத்தில் பிறை மாநிலத் தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் திறந்த இல்ல உபசரிப்பில் பேசுகையில், மாநிலத்தின் பட்ஜெட் குறைவாக இருந்தாலும், சமுதாயத்திற்குப் பயனளிக்கும் திட்டங்களைத் தொடர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது, சமூகத்தில் இனம் மற்றும் மதங்களைப் பொருட்படுத்தாமல் ஒருவரையொருவர் மதித்து நடப்பது சமூகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைக் குறிப்பிட்டு, நல்லிணக்க சமுதாயத்தில் ஒற்றுமை முக்கிய காரணியாக திகழ வேண்டும் என சாவ் எடுத்துரைத்தார்.
முதல் முறை பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், பிறை, புக்கிட் தெங்கா, புக்கிட் தம்புன் முதல் நிபோங் திபால் எல்லை வரை பணியாற்றுவதற்கு இத்தொகுதி சவாலான இடமாக இருந்ததாக சாவ் கூறினார்.
“இந்தத் தொகுதியைச் சுற்றியுள்ள உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நான் உறுதியளிக்கிறேன். மேலும், பினாங்கில் பிறந்து வளர்ந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் பாக்கியத்தைப் பெற்றதற்கும் நான் பெருமைப்படுகிறேன்.
“நாம் அன்வாரின் தலைமையில் பல திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டதைக் கண்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிகுழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தனது பரபரப்பான கால அட்டவணையில் திறந்த இல்லத்தில் கலந்து கொண்ட மாநில முதலமைச்சர் சாவ் அவர்களை வரவேற்றார்.
“எனது தொகுதியில் பல்வேறு பண்டிகைகளுக்குத் தொடர் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தும் பாரம்பரியத்தைத் தொடர்வேன்.
இந்நிகழ்ச்சியில் தேவாலய பாதிரியார் ரெவரெண்ட் ஃபாதர் டொமினிக் சாந்தியாகு, பாரிஷ் பாஸ்தர் கவுன்சில் உறுப்பினர் ஷர்மென் கிளென் பாலச்சந்திரன், செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கட்டிடத் துறை துணை இயக்குநர் மோய் சுய் மின், பிறை காவல் நிலையத் தலைவர் சுரேஸ்தரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.