வருகின்ற நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ “Continental Automotive Components Malaysia Sdn. Bhd” எனும் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் மிதிவண்டி ஓட்டுனருக்கும் பாதுகாப்பு கவச ஆடை அணிவித்தார். நிபோங் திபாலில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 1,000 வாகனமோட்டிகளுக்குப் பாதுகாப்பு கவச ஆடை வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு வட செபராங் பிறையில் மட்டுமே மோட்டார்வண்டி பயன்படுத்தி 1540 சாலை விபத்துகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், இவ்வாண்டு மார்ச் மாதம் வரை மோட்டார் சைக்கிள் பயன்படுத்தி 263 சாலை விபத்துகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன என செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர். ஜாவி பகுதியில் குறிப்பாக ஜாலான் பெர்செக்குத்துவான் மற்றும் ஜாலான் நெகிரி எனும் இடங்களில் அதிகமான சாலை விபத்துகள் நடைபெறுவதாக அடையாளங்காணப்பட்டுள்ளன.
பெருநாள் காலங்களில் அதிகமான வாகனமோட்டிகள் சாலையைப் பயன்படுத்துவர். எனவே வாகனமோட்டிகள் சாலை விதிமுறைப் பின்பற்றுவதோடு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சாலையில் பயணிக்க வேண்டும் என்றார். குறிப்பாக மழைக் காலங்களிலும் இரவு நேரத்திலும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் சட்டமன்ற உறுப்பினர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்கள் அவசியமாகப் பாதுகாப்பு கவச ஆடையை அணிய வேண்டும். ஏனென்றால், இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் இவர்களை அடையாங்காண்பதற்கு இலகுவாக இருக்கும். மேலும், ஜாவி தொகுதியில் சாலை விபத்துகள் நிகழ்வதற்கானக் காரணங்களை காவல்துறையினர் கண்டறிய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான லூ ஜூ உவாட், ங் மோய் லீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.}