‘சுடர் விளக்காயினும் தூண்டுகோள் வேண்டும்’ என்பார்கள். அதுபோல் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து அவர்களுக்கு அங்கிகாரம் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமைவதுடன் வெற்றி பெறாத மாணவர்களுக்கு அவர்களைப் போல் வெற்றி பெற வேண்டும் என்ற ஊக்கத்தை விதைத்து வெற்றி பாதைக்கு இட்டுச் செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இதைதான் பினாங்கு சீக்கியர் சங்கம் ஆண்டுதோறும் ஒரு விழாவாக ஏற்று நடத்தி வருகிறது. யு.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர், எஸ்.பி.எம் ஆகிய அரசாங்கத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற சீக்கிய மாணவர்களுக்குக் கடந்த 30-ஆம் திகதி பினாங்கு சீக்கியர் சங்க மண்டபத்தில் விருதளிப்பு விழா நடத்தப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த ஆண்டு இவ்விழா நடத்த முடியாமல் போனதால் இவ்வாண்டு 2010, 2011 ஆகிய ஈராண்டுகளுக்குச் சேர்த்து இவ்விழா நடைபெறுவதாகப் பினாங்கு சீக்கியர் சங்கத் தலைவர் திரு பல்விண்டர் சிங் கூறினார். இவ்விருதளிப்பு விழாவை டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெகதிப் சிங் டியோ அவர்கள் தலைமை தாங்கினார். சுமார் 30 மாணவர்கள் இவ்விருதளிப்பு விழாவில் சிறப்பிக்கப்பட்டனர். சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பணமுடிப்பும் நற்சான்றிதழும் வழங்கி அங்கிகரிக்கப்பட்டது. சீக்கியர் சங்கம் வழங்கிய அதே தொகையை தாமும் வழங்குவதாகத் திரு ஜெகதிப் சிங் அறிவித்தது சாதனை படைத்த மாணவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது. இம்மாணவர்களில் மிகச் சிறந்த மாணவராக செல்வி குர்பிரீட் கொர் த/பெ சொலிண்டர் சிங் என்ற மாணவி விளங்கினார். இவர், பி.எம்.ஆர் தேர்வில் 7 ஏக்களும் எஸ்.பி.எம் தேர்வில் 9 ஏக்களும் பெற்றதுடன் பஞ்சாபி மொழியிலும் ஏ பெற்றுச் சாதனை படைத்துள்ளார். இவர் தற்பொழுது சிரம்பான் நகரில் உள்ள மெட்ரிகுலேசனில் மருத்துவத் துறையில் தம் மேற்கல்வியைப் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு சீக்கியர் சங்கம் கடந்த 60 ஆண்டுகளாக இந்த குட்வாரா தளத்தில் செயற்பட்டு வருவதாக அதன் தலைவர் திரு பல்விண்டர் சின் கூறினார். இங்கு பஞ்சாபி பள்ளிக்கூடமும் சுமார் 30 ஆண்டு காலமாகச் செயற்பட்டு வருகிறதென்ற செய்தியையும் கூறினார். கல்சா தர்மிக் என்ற பெயர் கொண்ட இப்பள்ளியில் பஞ்சாமி மொழி மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. பினாங்கில் உள்ள ஒரே பஞ்சாபி பள்ளிக்கூடம் இதுவென்று அப்பள்ளியின் தலைமயாசிரியர் திரு.வசிர் சிங் தெரிவித்தார். ஒவ்வொரு சனிக்கிழமை மதியம் இரண்டிலிருந்து ஆறு மணி வரை வகுப்புகள் நடக்குமாம். 83 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் 9 ஆசிரியர்கள் பணியாற்றுவதாகப் பள்ளி தலைமையாசிரியர் குறிப்பிட்டார். ஒரு வீட்டில் எத்தனை சல்லாரங்கள் இருக்கிறதோ அத்தனை மொழிகளைக் கற்றுக் கொள் ஆனால் வீட்டின் நுழைவாயிலாகத் திகழ்வது உன் தாய் மொழியாகவே இருக்க வேண்டும் என்ற ஒரு அறிஞரின் கூற்று நினைவுக்கு வருகிறது. தாய் மொழியான பஞ்சாபி மொழியைச் சீக்கியர்கள் கற்று அதில் புலமை பெற வழிவகை செய்யும் வகையில் இப்பள்ளி சிறந்த முறையில் செயற்பட்டு வருகிறது என்றே கூற வேண்டும். அதுமட்டுமல்லாது இப்பள்ளி மாணவர்கள், பி.எம்.ஆர், எஸ்.பி.எம் ஆகிய அரசாங்கத் தேர்வுப் பாடமாகப் பஞ்சாபி மொழியை எடுத்து வருவது மிகவும் பெருமைக்குரியதும் பாராட்டுக்குரியதாகும்.
பொதுமக்களின் ஆதரவோடு செயற்பட்டு வந்த இப்பஞ்சாபி பள்ளிக்கூடம் மக்கள் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வோர் ஆண்டும் ரிம40,000 மானியம் பெற்று வருவதாகப் பள்ளித் தலைமையாசிரியர் திரு வசிர் சிங் தன் உள்ளக் களிப்பை வெளிபடுத்தினார். தற்பொழுது இப்பள்ளிக்கான புதிய கட்டட நிர்மானிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்தார். மாணவர்களுக்கு நூலகம், கணினி அறை, மண்டபம் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர மூன்று மாடி கட்டடம் நிர்மானிக்கப்படவுள்ளதாகக் கூறினார். மேலும் இப்பள்ளியின் கிளைப் பள்ளி ஒன்று பாயான் பாருவில் செயற்பட்டு வருகிறதாம். அங்கு மிகக் குறைந்த மாணவர்களே பயின்றாலும் ஆசிரியர்கள் சிரத்தையெடுத்து அம்மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழியைக் கற்பித்து வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சீக்கிய சமுதாயத்தினருக்கிடையேயும் மற்ற இனத்தவர்களுடனும் ஒரு நல்லிணக்கத்தையும் உறவையும் மேம்படுத்தும் வகையில் பினாங்கு சீக்கியர் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும், வசதி குறைந்த சீக்கிய சமுதாயத்தினருக்கு இச்சங்கத்தின் வழி பல உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பினாங்கு மாநிலத்தின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் சீக்கிய சமுதாயத்தினரின் ஒத்துழைப்பு, பங்களிப்பு, ஆதரவு ஆகிய அனைத்தும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.