ஜார்ச்டவுன் – கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இம்மாநிலத்தில் உள்ள தொழில்முனைவர்கள் குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிந்தபின்னர் தங்கள் தொழிலைத் தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்த பினாங்கு மாநில அரசு ஒரு சிறப்பு வியூகத்தை வகுத்துள்ளது.
இதில் ‘இயல்பான பினாங்கு மாநிலத்தை நோக்கி’ என்பது இந்த வியூகத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்ட. நிலைமையை மதிப்பிடுவதற்கும், மீண்டும் மாநிலத்தின் அன்றாட நடவடிக்கைக்குத் தயாராகுவதற்கும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலை செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவித்தார்.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு முதலாம் மற்றும் இரண்டாம் ஆணையில், மாநில அரசு இம்மாநில மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கியது, ஆயினும் நாம் இந்த நெருக்கடியில் நீண்ட காலம் பயணிக்க முடியாது என்பதையும் நாங்கள் உணர்கிறோம். ஆகவே, இம்மாநில தொழில்முனைவர்கள் தங்கள் தொழில்கள் மற்றும் வணிகங்களை தொடரவும் மேம்பாடுக் காணவும் உறுதிச் செய்வதில் மாநில அரசு கவனம் செலுத்தும்”, என தனது நிலைப்பாட்டினை சாவ் குறிப்பிட்டார்.
மேலும் விவரித்த சாவ், பினாங்கு நிறுவன (Penang Institute) ஆய்வின் படி கோவிட்-19 நெருக்கடியால் அதிகமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) குறிப்பாக சேவைத் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறிந்துள்ளது. அதில் வேளாண்மை, கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவைகள் ஆகிய நான்கு துறைகளை உள்ளடக்கிய 46 வகையான சிறு தொழில் வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நடத்தப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய சதவீதத்தை வழிகாட்டியாகப் பயன்படுத்த முடியுமானால், எஸ்.எம்.இ-யில் சேவைத் துறையில் மைக்ரோ தொழில்முனைவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட் – 19ல் பொருளாதார சரிவு அதாவது, நிறுவன செயல்பாடுகள் நிறுத்தப்படுதல், வணிகத்தில் சரிவு, கடன் பெறுவதில் சிரமங்கள் மற்றும் பிற வரையறுக்கப்பட்ட வளங்களுடன் அதிகமாக இந்த குழு (மைக்ரோ) பாதிக்கப்பட்டுள்ளதில் கவனம் செலுத்த வேண்டும்.
பினாங்கின் பொருளாதாரத்தை பொருத்தவரை சிறு தொழில் வணிகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது, அது மாநிலத்தில் சுமார் 99 சதவீத வணிகங்கள் ரிம 30 பில்லியன் பொருளாதார மதிப்பைக் கொண்ட பிரிவில் உள்ளது. மேலும் 400,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இதனால் வழங்கப்படுகின்றது.
அதனையடுத்து, நடமாட்ட கட்டுபாட்டு ஆணையின் போது பினாங்கில் எந்தவொரு புதிய கோவிட் -19 கிளஸ்டர்களையும் பதிவுச் செய்யாமல் கட்டுப்படுத்த முடிந்தது. கெடாவிற்கு அடுத்து பினாங்கு இரண்டாவது குறைந்த வழக்குகளை பதிவுச்செய்யும் மாநிலமாக திகழ்வதாக மாநில முதல்வர். கூறினார்.