பினாங்கு மாநிலத்தில் உள்ள சிறுதொழில் செய்யும் வியாபாரிகளுக்குப் பொருளாதார அடிப்படையில் உதவும் பொருட்டு மாநில அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கி ‘PTSR- Projek Titian Saksama Rakyat’ என்றழைக்கப்படும் திட்டத்தின் கீழ்க் வியாபாரக் கடனுதவியை வழங்கி வருகிறது. பினாங்கு மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து மாநில அரசு பினாங்கின் சிறு தொழில் வியாபாரிகளுக்கு சுமையின்றி எளிமையான முறையில் கூடுதல் மூலதனத்தை இந்தச் சிற்றளவு கடனுதவித் திட்டத்தின் வழி ஏற்படுத்தித் தருகிறது.
பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் சிறுதொழில் வியாபாரிகள் தங்கள் வியாபார வலையமைப்பைப் பெருக்கிக் கொள்ளவும் வணிக நுணுக்கங்களைக் கையாண்டு வியாபாரத்தை விரிவு படுத்தவும் இந்தக் கடனுதவி தோள் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது. இதன்வழி வியாபாரிகள் இலாபகரமான வியாபரத்தை மேற்கொள்வதுடன் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறது எனலாம். இனி வியாபாரிகள் அதிகமான வட்டிப் பணத்தை எதிர்ப்பார்க்கும் ஆலோங் போன்றவர்களை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று சட்டமன்ற சபாநாயகர் டத்தோ அப்துல் ஹலிம் தம் உரையில் கூறினார்.
மாநில அரசு இந்தக் கடனுதவித் திட்டத்திற்காக 2012-ஆம் ஆண்டு வரைக்கும் ரிம3 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த ஆண்டு மீண்டும் ரிம 3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சிறு தொழில் செய்யும் வியாபாரிகள் எந்தவொரு வட்டிவிகிதமின்றி மாநில அரசிடமிருந்து ரிம2000 முதல் ரிம10,000 வரையில் கடனுதவியைப் பெறலாம். வாங்கிய கடனை ஒராண்டிலிருந்து ஈராண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும். இரண்டாம் முறையாகக் கடனுதவி பெற விரும்புவோருக்கு 8% சேவைக் கட்டணம் விதிக்கப்படும். இக்கடனுதவியைப் பெற மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதுடன் தங்கள் வியாபாரமோ வணிகமோ பினாங்கில் செயற்படக்கூடியதாக இருக்க வேண்டும். அதோடு வியாபாரத் தளமும் அதற்கான உரிமமும் பெற்றிருப்பது அவசியமாகும். இதுவரை சுமார் 900 பினாங்கு சிறுதொழில் வியாபாரிகள் இத்திட்டத்தின் வழி பயன்பெற்றுள்ளனர்.
அண்மையில் இக்கடனுதவிக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி பினாங்கு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தலைமை தாங்கிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் இதுபோன்ற கடனுதவி வசதிகளைப் பினாங்கு வாழ் சிறுதொழில் வியாபாரிகளுக்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். இதன்வழி, வியாபாரிகள் சிறந்த நிர்வாகத் திறனை மேற்கொண்டு வணிக நுணுக்கங்களை கற்றுணர்ந்து தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதுடன் பினாங்கு மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக விளங்குவர் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கடன்பெறும் அனைத்து வியாபாரிகளும் கிடைக்கப்பெறும் கடன் நிதியைத் திறன்மிக்க முறையில் பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கடனுதவியைப் பெற்றுக் கொண்ட பினாங்கு சிறு தொழில் வியாபாரிகள்
அதனைக் கட்டி முடிப்பார்கள் என்று உறுதிமொழி கூறுகின்றனர்.
மாநில அரசின் இவ்வியாபாரக் கடனுதவியைப் பெற்றுக் கொண்ட திரு கிருஸ்ணா வயது 30, தொலைப்பேசி மற்றும் படியெடுத்தல் சேவை வழங்கும் தன் கடையை மேம்படுத்துவதற்கு இந்நிதியைப் பயன்படுத்தப்போவதாகக் கூறினார். வங்கிகள் சிறிய தொகைகளுக்கான கடன் விண்ணப்பத்தை நிராகரித்து விடுகிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். அதனால், இதுபோன்ற கடனுதவிகள் சிறுதொழில் வியாபாரிகளுக்கு நிச்சயம் நல்ல ஊக்கத்தையளித்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண வழிவகுக்கும் என்றார். இவரைப்போல், திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம், திரு மோகனதாஸ் கணேசன், திரு குணசேகரன், திரு சிவனேசன் ஜெயபாலன் மற்றும் திருமதி சூரியகலா ஆகிய பினாங்கு வாழ் இந்தியர்களும் பினாங்கு முதல்வரிடமிருந்து இக்கடனுதவிக்கான காசோலையைப் பெற்றுக் கொண்டனர்