பினாங்கு கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் ஏழாவது அனைத்துலக சிறுவர்களுக்கான கதைச்சொல்லும் கார்னிவல் பினாங்கு ஜெம்ஸ் பெல் சிட்டி அனைத்துலக பள்ளி வளாகத்தில் வருகின்ற 15 அக்டோபர் தொடங்கி நடைபெறவுள்ளதாகக் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
இந்நிகழ்வின் வழி குடும்பத்தினரிடையே நல்லிணக்கத்தை மேலோங்க செய்வதோடு சிறுவர்களிடையே கல்வியறிவு, படைப்பாற்றல், மற்றும் சிந்தனையாற்றலை மேலோங்க ஊக்குவிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். நியூசிலாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் இருந்து கதை சொல்லும் வல்லுநர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இதனிடையே, 16 அக்டோபர் 2016 அன்று பினாங்கு சென்ட்ரல் கல்லூரி வளாகத்தில் பெற்றோர், பாலர்ப்பள்ளி ஆசிரியர்களுக்கென பிரத்தியேகமாக கதைச்சொல்லும் பட்டறைகளும் நடத்தப்படவுள்ளது. அதோடு, ஏழு வயதிலிருந்து 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இப்பட்டறையில் கலந்து கொள்ள விரும்பும் பெரியவர்களுக்கு ரிம 150.00 மற்றும் சிறியவர்களுக்கு ரிம 50.00 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதனிடையே, பினாங்கு மாநில பெருநிலம் மற்றும் தீவுப்பகுதிகளில் இருந்து சுமார் 400 பாலர்ப்பள்ளி மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாலர்ப்பள்ளி மாணவர்களிடையே கல்வி பயிலும் ஆர்வத்தை சிறுவயதிலே தூண்ட இத்திட்டம் அமையும் என கூறினார் பேராசிரியர்.