ஜார்ச்டவுன் – சிலிக்கான் தீவு என்று பெயரிடப்பட்ட, பினாங்கு தெற்குத் தீவுத் திட்டத்தின் (PSI) கீழ் உள்ள மூன்று செயற்கைத் தீவுகளில் ஒன்றான A தீவில் உயர் தொழில்நுட்ப தொழில்துறையான ‘பசுமை தொழில்நுட்ப பூங்கா( Green Tech Park) அமைக்கத் திட்டமிடப்படுகிறது.
இந்த பசுமை தொழில்நுட்ப பூங்காவில்(GTP) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம்(R&D), டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனம், மின்- வியாபாரம், வணிக செயல்முறை அவுட்சோர்சிங் (BPO) உள்ளடங்கும்,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கொம்தார் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
இந்த சிலிக்கான் தீவில் மேம்பாடுக் காணும் GTP மற்றும் BPO-வின் இருப்பிடம் பிரதான தலத்தில் அமைந்துள்ளது. ஏனெனில், இது பாயான் லெப்பாஸ் தொழில்துறை மண்டலம் (FIZ), பினாங்கு அனைத்துலக விமான நிலையம் (PIA) மற்றும் சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஷாம் ஷா பாலம் ஆகியவற்றிற்கு அருகில் உள்ளது என்று நில மேம்பாடு & பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் தெரிவித்தார்.
மேலும், EIA இன் ஒப்புதலுக்குப் பிறகு தற்போது மாநில அரசு, இத்திட்டம் செயல்படுத்தும் கூட்டாளர் (PDP) மூலம் பினாங்கு மாநில சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்திற்கான (EMP) ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, என முதல்வர் விளக்கமளித்தார்.
“இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் EMP அனுமதிக் கிடைத்த பின்னரே கடல் விரிவாக்கத் திட்டப் பணிகள் தொடங்கப்படும், என்றார்.
மேலும், இரண்டாம் துணை முதல்வர், பேராசிரியர் ப.இராமசாமி; மாநில அரசு செயலாளர், டத்தோ முகமட் சாயுத்தி பாக்கார்; உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் ஜாய்ரில் கீர் ஜொஹாரி; பினாங்கு உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் சென்.பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி (PIC), டத்தோஸ்ரீ பாரிசான் டாருஸ் மற்றும் SRS கூட்டமைப்பு சென் பெர்ஹாட் நிறுவனத்தின் துணை திட்ட இயக்குநர் அஸ்மி முகமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தீவில் ‘Heart of the Island’ (HOTI) எனும் வணிக மையம் அழகிய நீர்முனையில் கட்டப்பட்டு சிறப்பு கால்வாய்களின் வலையமைப்பால் இணைக்கப்படும். இத்தலம் மாநிலத்தின் மற்றொரு சுற்றுலா அம்சமாக திகழும் என விளக்கமளித்தார்.
“இந்த இரண்டுத் திட்டங்களும் ‘சிலிக்கான் தீவு’ பெருந்திட்டதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றிப்பெறுவதன் மூலம் குறைந்த கார்பன் 2030 என்ற நகர்ப்புற சவால் திட்டத்தில் மலேசிய பசுமை தொழில்நுட்பம் மற்றும் பருவநிலை மாற்ற கழகத்தின் (MGTC) வடிவமைப்பு வகைக்கான ‘5 டயமண்ட்’ அங்கீகாரத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. கார்பன் உற்பத்தியை 45 சதவீதம் குறைக்க இலக்குக் கொண்டுள்ளது.
“PSI இன் வளர்ச்சியானது பினாங்கு மற்றும் மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டுக்குத் துணைபுரியும். இது 30 ஆண்டுகளுக்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ரிம2.2 டிரில்லியன் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI, ரிம70 பில்லியன்) மற்றும் பல்வேறு துறைகளில் 460,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.
முதல் செயற்கைத் தீவிற்கான கடல் மேம்பாட்டுப் பணிகள் 2025 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், 2026 இல் தொழில்துறை வளர்ச்சிப் பணிகள் மற்றும் அதற்கு அடுத்த ஆண்டுகளில் GTP செயல்பாடுகளும் செயல்பாடுக் காணும் என சிலிக்கான் தீவின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டத்தின் விளக்கக்காட்சிக் குறித்து பாரிசான் விளக்கமளித்தார்.
சிலிக்கான் தீவில் உருவாக்கப்படும் பல்வேறு பசுமை முயற்சிகள் பின்வருவன:-
*405 ஏக்கர் நிலத்தில் பொதுப் பூங்காக்கள், சதுப்பு நிலங்கள், வெள்ளப்பெருக்கு சமவெளிகள் மற்றும் bioswale
அமைக்கப்படும்.
*சதுப்புநிலக் காடுகளை வளர்ப்பது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பிரபலமான பொழுதுபோக்குப் பகுதியாக மாறும் சாத்தியம் உள்ளது.
*சிறப்பான கால்வாய்களின் கட்டுமானம் மற்றும் நீலம்-பச்சை வலையமைப்பு ‘நீர் டாக்ஸி’ போக்குவரத்தை செயல்படுத்த உதவும்.
*புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு GTP இல் 100 சதவீதம்;
*பசுமை இயக்கத்தைச் செயல்படுத்த 110 கிலோமீட்டர் தூரம் கொண்ட சைக்கிள் மற்றும் பாதசாரி வலையமைப்பின் கட்டுமானம்;
*மின் பொதுப் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக இலகு இரயில் போக்குவரத்து அமைப்பு (LRT) மற்றும் மின் பேருந்து சேவைகளை செயல்படுத்துதல்;
*திறமையான குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் அம்சங்களுடன் கூடிய மிகக் குறைந்த ஆற்றல் கொண்ட கட்டிடங்களை (super low-energy buildings) நிர்மாணித்தல்;
*பருவநிலைக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் பசுமையான கூறுகளுடன் நிலையான நகர்ப்புற திட்டமிடலை செயல்படுத்துதல்;
*இரட்டைச் செயல்பாட்டுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சேமிப்பு சாதனங்களைப் பயன்படுத்தி மூல நீரின் தேவையைக் குறைத்தல்;
*குப்பைக் கிடங்குகளில் கழிவுகளைக் குறைக்க மறுசுழற்சி திட்டங்கள், உரம் தயாரித்தல் செயல்படுத்தப்படும்.