அண்மையில் பினாங்கில் பெய்த வழக்கத்திற்கு மாறான கனத்த மழையால் ஆங்காங்கே வெள்ளம் ஏறியது. இந்த வெள்ள பிரச்சனைக்கு சுங்கை பினாங்கு ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்தது முக்கிய காரணம் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் குறிப்பிட்டார். சுங்கை பினாங்கு ஆற்றின் வெள்ள நிவாரண மேம்பாட்டு திட்டத்திற்கு மாநில வடிகாலமைப்பு மற்றும் நீர்ப்பாசன துறையினர் மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரிம150 லட்சம் பயன்படுத்தி சுங்கை பினாங்கு வெள்ள நிவாரண திட்டத்திற்கு திட்டம் வடிவமைப்பு, தள விசாரணை அறிக்கை மற்றும் பொறியியலாளர் நியமனம் போன்றவைகளை விரைவில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் சுங்கை பினாங்கு ஆற்றின் வெள்ள நிவாரண மேம்பாட்டு திட்டம் ரிம125 லட்சம் மற்றும் சுங்கை பினாங்கு ஆற்றின் சுகாதார பாதுகாப்பிற்கு ரிம25 லட்சம் செலவிடப்பட்டு, 2017-ஆம் ஆண்டு மத்தியில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, மாநில வடிகாலமைப்பு மற்றும் நீர்ப்பாசன துறையின் கீழ் மாநில அரசு இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சிடம் வெள்ள நிவாரண நிதியத்தை விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிட்டார்.
சுங்கை டொங்கோங், சுங்கை கெசில், சுங்கை ஆயிர் புத்தே, சுங்கை ஆயிர் ஈத்தாம், சுங்கை ஆயிர் தெர்ஜுன், மற்றும் சுங்கை ஜெலுந்தோங் என்ற சிறு-சிறு ஆறுகளின் நீர் சுங்கை பினாங்கில் இணைவதால் அதன் நீர் மட்டம் எளிதில் அதிகரிப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த 7 நவம்பர் அன்று மாநில அரசு வெள்ள நிவாரண திட்டத்திற்கு ரிம665,000-ஐ ஏழு வெள்ள நிவாரண திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது பாராட்டக்குரியதாகும்.