மலேசியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் பினாங்கு மாநிலத்தில் மட்டும் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் குறைந்துள்ளன என அண்மையில் சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளி விபரங்கள் குறிப்பிடுகிறது.பினாங்கு மாநிலம் “டிங்கி அற்ற சமுதாயத்தை” (Komuniti Bebas Denggi ) உருவாக்க இலக்கு கொண்டுள்ளது. எனவே, பினாங்கு மாநில அரசியல் தலைவர்கள், பொது இயக்கங்கள் தத்தம் ஆங்காங்கே சுத்தம் செய்தல், விழிப்புணர்வு கருத்தரங்கு, நேரடியாக பொதுமக்களிடம் அறிவிப்பு வழங்கியதன் விளைவாக இந்நிலை உருவாகியுள்ளது என தெலோக் இண்டா அடுக்குமாடி குடியிருப்பை நேரில் சென்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
பிறை சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழக ஏற்பாடுச் செய்திருந்த துப்புரவுப் பணி நிகழ்வினில் பேராசிரியர் கலந்து கொண்டார். அவ்வட்டாரத்தில் ஒன்பது மாத குழந்தைக்கு டிங்கி காய்ச்சல் சம்பவம் பதிவாகியுள்ள நிலையில் அவ்வட்டாரத்தில் உள்ள வீடமைப்புப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். எனவே, ‘D1’ மற்றும் ‘D2’ பிரிவுகளில் வாழும் மக்கள் ஒன்றிணைந்து துப்புரவு பணியில் ஈடுப்பட்டனர். பினாங்கு மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் குறைந்துள்ள வேளையில் இதனை முற்றாக அழிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். உடல் சுகாதாரத்தில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்களை உணர்ந்தால் அருகில் இருக்கும் மருத்துவமனைகளை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
சுற்றுப்புற தூய்மை, அவ்வப்போது துப்புரவுப் பணி மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கையின் மூலம் இப்பிரச்சனையை முற்றாக களைய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். இதன்வழி, பினாங்கு மாநில கோட்பாடான பசுமை,தூய்மை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான பினாங்கு மாநிலத்தை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்பது வெள்ளிடைமலை.