ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில இந்து சங்கம் மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ண ஆசிரமம் ஏற்பாட்டில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் 162-வது பிறந்தநாள் முன்னிட்டு ஐந்து சாதனை இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பினாங்கு ஸ்காட்லெண்ட் சாலையில் அமைந்துள்ள இராமகிருஷ்ண ஆசிரமத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலைக்கு அனைவரும் மலர் செலுத்தி மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், இளைஞர்கள் சக்தியை வெகுவாக பேசிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் போதனைக்கு இணங்க ஐந்து இளைஞர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
“கல்வி, விளையாட்டு, சமயம், பொது தொண்டு, கலை மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பு வழங்கி வரும் இளைஞர்களைக் கெளரவிப்பது அவசியம். ஏனெனில், இன்றைய இளைஞர்கள் நாளைய சமூகத்தின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செலுத்தும் தலைவர்கள் ஆவர்,” என்று பினாங்கு மாநில இந்து சங்கத் தலைவர் விவேக ரத்னா தர்மன் தெரிவித்தார்.
“இளைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். எனவே, மூத்த தலைவர்கள் ஒவ்வொரு துறைகளிலும் அவர்கள் முன்னெடுத்துச் செல்ல தகுந்த வாய்ப்புகள் வழங்க வேண்டும். இதன் வழி, அவர்களின் தலைமைத்துவ மாண்பு மேலோங்கி அடுத்து அத்துறையை சிறப்பாக வழிநடத்த துணைபுரியும்,” என தர்மன் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், ஆசிரம துணைத் தலைவர் கே.இராமசாமி, மாநில பேரவை மகளிர் தலைவர் ஆர். மேகலா மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ம.இ.காவின் பினாங்கு மாநில இளைஞர் பிரிவு தலைவர் த.ரூபராஜ் அந்த மாநிலத்தில் செய்த பல மக்கள் சேவைகளுக்காக நம்பிக்கைகுரிய இளம் தலைவர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதேவேளையில், இசை துறையில் மிகப் பெரிய சாதனை படைத்த திலீப் வர்மன்; சமயக் கல்வி சமுதாயத்திற்கு அவசியம் என சமய கல்வி சேவை புரிந்து வரும் சிறந்த சமய கல்வி சேவையாளரான ஹரிபிரசாட்; மற்றும் சமய சேவைக்காக புக்கிட் பெண்டேரா இந்து சங்கப் பேரவை தலைவர் எம்.சிவகுரு கௌரவிப்பட்டனர்.
அவரை தொடர்ந்து 12 தங்கங்களை சிலம்பம் மாணவர்கள் பெற்று சாதனை புரிய அயராது பயிற்சி வழங்கிய சிலம்பம் பயிற்றுனர் ரவீந்திரன் கௌரவிக்கப்பட்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையரும் மாநில பேரவை இளைஞர் பிரிவுத் தலைவருமான சிவ ஸ்ரீ விவேக ரத்னா தினேஷ் வர்மன், சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் மற்றும் அதனை வாழ்வில் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து சொற்பொழிவு ஆற்றினார்.
அண்மையில், கத்தாரில் நடைபெற்ற ஆசிய அனைத்துலக சிலம்பம் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களை வெற்றிப் பெற்ற மலேசிய சிலம்பம் அணியின் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.