புக்கிட் தம்பூன் – சுவிட்சர்லாந்தைத் தலமாகக் கொண்ட மின் அளவீட்டு நிறுவனமான LEM தென்கிழக்கு ஆசியாவில் அதன் தடத்தை விரிவுபடுத்த பினாங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் கட்டுமானம் சுமார் ரிம70 மில்லியன் முதலீட்டில் கட்டப்படும் என LEM தலைமை நிர்வாக அதிகாரி பிரான்க் ரெவ்லட் கூறினார்.
இந்நிறுவனம் மலேசியாவில் அமைக்கும் முதல் உற்பத்தி தொழிற்சாலையாகத் திகழ்கிறது.
“12,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இந்த தொழிற்சாலை 2024 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் அடுத்த 5 முதல் 8 ஆண்டுகளில் 500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“பினாங்கில் நிர்மாணிக்கப்படும் இந்த தொழிற்சாலையில் ஒருங்கிணைந்த மின்னோட்டம் சென்சார் அல்லது ICS மற்றும் புதிய தயாரிப்பை வெளியீடுக் காணவும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
“மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியீடுக் காணும் முதல் உற்பத்தி தயாரிப்புகள் ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோமேஷன், வாகனம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்க உத்வேகம் கொள்வதாக,” பிரான்க் North Penang Science Park -இல் நடைபெற்ற LEM தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.
LEM பினாங்கில் முதலீடுச் செய்ய முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம் திறன் மிக்க மனித வளம் கொண்டிருப்பதாக பிரான்க் சுட்டிக்காட்டினார்.
இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவின் போது, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ஹலிம் ஹுசைன், புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக், இன்வெஸ்ட் பினாங்கு தலைமைச் செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான், முதல்வரின் சிறப்பு முதலீட்டு ஆலோசகர் டத்தோஸ்ரீ லீ கா சூன் மற்றும் மலேசியாவுக்கான சுவிஸ் தூதர் ஆண்ட்ரியா ரெய்ச்லின் கலந்து கொண்டனர்.
இந்த விழாற்கு சிறப்பு வருகை அளித்த மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பினாங்கிற்கு LEM-ஐ வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
“இம்மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு, பினாங்கை மின் மற்றும் மின்னணு (E&E) முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய பிரதான தலமாகத் திகழச் செய்கிறது.
“வளர்ந்து வரும் மற்றும் உயர்-வளர்ச்சித் தொழிற்சாலையாக மின் அளவீட்டில் முன்னணி வகிக்கும் LEM நிறுவனம், பினாங்கில் செயல்படுவதால் பல நன்மைகள் அளிப்பதோடு உலகளாவிய தொழில்நுட்ப வரைபடத்தில் பினாங்கு மாநிலத்தின் பெயர் நிலைநிறுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
“இந்த மாநிலத்தின் தொழில்மயமாக்கல் பயணம் 1972 இல் தொடங்கிய முதல், பினாங்கு மகத்தான முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இந்த ஆண்டு பினாங்கின் தொழில்மயமாக்கலின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், புதிய மற்றும் முன்னதாக உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து காணப்படும் வளர்ச்சி மற்றும் வேகத்தைக் கண்டு
பெருமைப்படுகிறேன்.
“எங்கள் வலுவான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு, திறன் மிக்க மனித வளம் மற்றும் அனைத்து வகையான மாநில முன்முயற்சிகளும்
முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (Mida), இன்வெஸ்ட் பினாங்கு மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) ஒருங்கிணைந்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதிலும், திட்டத்தைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் சாவ் நன்றித் தெரிவித்தார்.
“மாநில அரசாங்கம், இன்வெஸ்ட் பினாங்கு மூலமாக, LEM திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தொடர்ந்து உதவுவதற்கும், எங்கள் முழு ஆதரவை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளது, என்றார்.