பினாங்கு செத்தியா ஸ்பைஸ்(பினாங்கு அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி மையம்) அதிகாரப்பூர்வமாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் திறந்து வைத்தார். எஸ்பி செத்தியா மேம்பாட்டு நிறுவனம் குறித்த நேரத்தில் இம்மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டதற்கு தனது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்தார். செத்தியா ஸ்பைஸ் நீர்வள மையம், செத்தியா ஸ்பைஸ் கூடாரம், உணவகம், ஸ்பைஸ் அரேனா ஆகிய அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களும் ஒரு குடையின் கீழ் அமைக்கப்பட்டது என்றால் மிகையாகாது.
திறந்த குத்தகை முறையில் எஸ்பி செத்தியா மேம்பாட்டு நிறுவனம் ரிம350மில்லியன் பொருட்செலவில் இத்திட்டத்தைக் கைப்பற்றி 7 ஏக்கர் நிலத்தில் பொது வசதி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை மேற்கொள்ள எதிர்க்கட்சி தரப்பினர் மற்றும் அரசு சார்பற்ற தனியார் நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த வேளையிலும் இன்று மாநில அரசு அனைத்துலக ரீதியில் சிறந்த தலமாக நிர்மாணித்துள்ளது என்றார் பெருமிதத்துடன் முதல்வர்.
செத்தியா ஸ்பைஸ் நீர்வள மையத்தில் ஒலிம்பிக் தரம் கொண்ட நீச்சல் குளம் மற்றும் சிறுவர்கள் குளிப்பதற்கான விளையாட்டு நீச்சல் குளம் ஆகியவை இடம்பெறுகிறது. பினாங்கு மாநிலத்தில் 2008 முதல் 2014 வரை 100% முதலீட்டு அதிகரிப்பு இம்மாநிலம் முதலீட்டாளர்களின் சிறந்த தலமாக விளங்குகிறது என்பதை மெய்ப்பிக்கிறது. பினாங்கு மாநிலம் அனைத்துலக வியாபாரத்துறையில் வெற்றி நடைப்போடுவதால் அனைத்துலக மாநாடு, கண்காட்சி மற்றும் சந்திப்புக் கூட்டம் இடம்பெற செத்தியா ஸ்பைஸ் பிரமாண்டமான தலமாக விளங்கும். இத்தலம் தங்கும்விடுதி வசதியுடனும் முதலாம் மற்றும் இரண்டாம் பாலங்களுக்கு அருகாமையிலும் இடம்பெறுகிறது.
அனைத்துலக ரீதியில் கட்டப்பட்ட இந்த செத்தியா ஸ்பைஸ் தலம் வருங்காலங்களில் கூடுதல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு அஸ்திவாரமாகத் திகழும் என்றார் மாநில முதல்வர்.