செபராங் பிறை நகராண்மைக் கழகத்திற்கு மாநகர் அங்கீகாரம் கிடைக்க தொடர்ந்து முயற்சிக்கப்படும் – மாநில முதல்வர்

Admin

செபராங் பிறை நகராண்மை கழகத்திற்கு மாநகர் அங்கீகாரம் பெற பினாங்கு மாநில அரசு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்த போது அது நிராகரிக்கப்பட்டது. செபராங் பிறை நகராண்மை கழகம் மாநகர் அங்கீகாரத்தை பெற அனைத்து தகுதிகளும் கொண்டிருக்கும் வேளையில் புதிய மத்திய அரசிடம் அதற்காக விண்ணப்பிக்கவிருப்பதாக செபராங் பிறை நகராண்மை கழக புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பதிலளித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்.

ஜெசன் ராஜ் – முதல் முறையாக செபராங் பிறை நகராண்மை கழக உறுப்பினராக ஐ.செ.கா கட்சியை பிரதிநிதித்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் தாமான் இண்ராவாசே வட்டாரத்தில் ஏற்படும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுக்காணவிருப்பதாகவும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளார்.

செபராங் பிறை நகராண்மை கழக உறுப்பினர்களாக 24 உறுப்பினர்கள் உள்ளுராட்சி சட்டம் 10(1) 1976 செக்‌ஷன் அடிப்படையில்  ஜுலை 2018 முதல் டிசம்பர் 2019 கால தவணையில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், உள்ளூராட்சி,வீடமைப்பு திட்டமிடல், கிராமப்புற & நகர்புற மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, பினாங்கு மாநில தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ பரிசான் பின் டாருஸ் ஆகியோரின் முன்னிலையில் இப்பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. கடந்த 14-ஆவது பொதுத்தேர்தலில் முன்னாள் செபராங் பிறை நகராண்மை கழக நான்கு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி கண்டனர். இதனைத் தொடர்ந்து இம்முறை பதினொன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு புதிய இந்திய பிரதிநிதிகளும் மேலும் இருவர் மறுநியமனம் என நால்வர் செபராங் பிறை நகராண்மை கழக உறுப்பினராக சேவையாற்றுவர்.

செபராங் பிறை நகராண்மை கழக உறுப்பினர்கள் மக்கள், செயல்முறை, கொள்கை (3P – People,Process,Policy) அடிப்படையில் சிறந்த சேவையை மக்களின் நலனுக்காக வழங்க வேண்டும் என மாநில முதல்வர் தமதுரையில் குறிப்பிட்டார். செபராங் பிறை சிறப்பு திட்டம் 2018-2022 அறிவார்ந்த நகரமாகவும் குறைந்த கரிமியலவாயு கொண்ட நகரமாக உருமாற்ற இத்திட்டத்தை செபராங் பிறை நகராண்மை கழகம் வகுத்துள்ளது என்பது பாராட்டக்குரியதாகும்.