பினாங்கு மாநில வியாபாரத் துறைக்கு சரித்திர புகழ்ப்பெற்ற தளமாக விளங்கும் செளராஸ்தா சந்தையின் வரலாற்றினை அனைவரும் அறிவர். இப்பகுதியில் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் 1786-ஆம் ஆண்டு தொடங்கி வியாபாரம் தொடங்கிய பதிவுகள் இடம்பெறுகின்றன. எனவே செளரஸ்தா சந்தையின் உட்பகுதியில் கட்டப்படும் பல்நோக்கு மண்டபத்திற்கும் காலஞ்சென்ற இந்தியா ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற பரிந்துரையை செளரஸ்தா சந்தை வியாபாரிகள் சங்கம் மாநில அரசிடம் விடுத்தனர்.
பல ஆண்டுகளாக இச்சந்தை மேம்பாட்டுத் திட்டம் குறித்து வியாபாரிகள் கொடுத்த கோரிக்கைகளை முன்னாள் அரசாங்கம் செவி சாய்க்காத நிலையில் 2008-ஆம் ஆண்டு நம்பிக்கை கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு தான் செளராஸ்தா சந்தை சீரமைக்கப்படுகிறது என்றார் சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லிம். செளரஸ்தா சந்தையின் உட்பகுதியில் கட்டப்படும் பல்நோக்கு மண்டபம் 1000 பேர் உள்ளடக்கும், அதோடு 123 கார் நிறுத்தும் இடங்கள் மற்றும் 235 கடைகள் கீழ் பகுதியிலும் முதல் மாடியில் 60 கடைகளும் இம்மேம்பாட்டுத் திட்டத்தில் இடம்பெறுகின்றன எனக் குறிப்பிட்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. இந்தியர்களின் அறிவியல் தந்தையான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரைச் சூட்டுவது பாராட்டக்குரியது என்று செளரஸ்தா சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமட் நாசீர் முகிதீன் கூறினார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் டாக்டர் அப்துல் கலாம் பினாங்கு மாநிலத்திற்கு வருகையளித்து, செளரஸ்தா சாலைப் பகுதியில் நடந்து செண்றுள்ளார். எனவே, அவரின் வருகையை நினைவுக்கூறும் வகையில் பெயர் சூட்ட வேண்டும் என விவரித்தார்.
வியாபாரிகள் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று இரண்டாம் துணை முதல்வர் சந்தைக்கு வருகையளித்து மேம்பாட்டுத் திட்டத்தை பார்வையிட்டார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பேராசிரியர் வியாபாரிகள் சங்கம் விடுத்த கோரிக்கையைச் சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் நேரடி பார்வைக்குக் கொண்டு செல்வேன் என உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் செபராங் பிறை சமூகநல இயக்கத்தின் தலைவர் திரு செளந்தராஜன், லீகா முஸ்லிம் செயலாளர் டத்தோ சுலைமான், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.}