மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு உறுதியளித்தது போல கூடிய விரைவில் ஜாலான் எஸ்பி செல்லையாவில் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் தொடங்கவுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 14-ஆம் திகதி இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் பினாங்கு மேம்பாட்டுக் கழகத் தலைமை இயக்குநர் டத்தோ ரொஸ்லி ஜாபார் மற்றும் சுபிகோன் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிம் பெங் கியோங் கையொப்பமிட்டனர். இந்நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
மலிவு விலை வீடமைப்புத் திட்டம் சிறப்பாக நிறுவுவதற்கு பினாங்கு நகராண்மைக் கழகம் நிலம் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளையில் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் இத்திட்டத்தின் வழிநடத்துனராகவும் சுபிகோன் சென். பெர்ஹாட் மேம்பாட்டு நிறுவனமாகவும் திகழ்கின்றனர்.
இத்திட்டத்தில் 11.04 ஏக்கர் நிலப்பரப்பில் 1,900யூனிட் வீடுகள் கட்டப்படும். கூடிய விரைவில் தொடங்கப்படும் இத்திட்டம் ஐந்து ஆண்டு காலக்கட்டத்தில் அதாவது 2017-ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வீடமைப்புப் பகுதியில் 700 சதுர அடியில் 770யூனிட் வீடுகள் (ரிம72,500), 800 சதுர அடியில் 883யூனிட் வீடுகள் (ரிம200 000), 900 சதுர அடியில் 165யூனிட் வீடுகள் (ரிம300 000), மற்றும் 1000 சதுர அடியில் 82யூனிட் வீடுகள் (ரிம400000) கட்டப்படும்.
ரிம85 கோடி பொருட்செலவில் கட்டவிருக்கும் இந்த வீடமைப்புப் பகுதியில் விளையாட்டு பூங்கா, மசூதி, மறுபயனீட்டு மையம், பாதசாரி மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்களுக்குத் தனிப்பாதை ஆகிய பொது வசதிகள் செல்லையா நகர பூங்காவில் இடம்பெறும்.
ஜாலான் எஸ்பி செல்லையாவில் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்திற்கானக் கண்காட்சி கடந்த 26-11-2013-ஆம் நாள் கொம்தாரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாநில முதல்வரின் பிரதிநிதியாக ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினார். இந்த கண்காட்சியில் முதலாம் துணை முதல்வர் மாண்புமிகு டத்தோ ரஷிட் பின் அஸ்னோன், இரண்டாம் துணைமுதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.