ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு பட்டர்வொர்த் பகுதியில் அமைந்துள்ள ஜாலான் ஜிரான் 1 என்ற பெயரை ஜாலான் எம்.குப்பன் என மறுபெயரிட ஒப்புதல் அளித்துள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரில் கீர் ஜொஹாரி கூறுகையில், ஆட்சிக்குழு சந்திப்புக் கூட்டத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி சமர்ப்பித்த அச்சாலையின் பெயரை மாற்றுவதற்கானப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது, என்றார்.
“ஜாலான் ஜிரான் 1 என்பது ஒரு புதிய சாலையாகும். நமது நாட்டின் காற்பந்து அரங்கில் மாநில அரசின் பெயரை நிலைநாட்டிய காற்பந்து வீரர்க்கு வழங்கப்படும் அங்கீகாரமாக கருதப்படுகிறது,” என்று அவர் மாநில சட்டமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
தேசிய மற்றும் மாநில ரீதியிலான காற்பந்து அரங்கில் விளையாட்டு வீரராகவும் பயிற்சியாளராகவும் விளங்கிய டத்தோ எம். குப்பன் நிறைய பங்களிப்பை அளித்துள்ளார் என்று சாய்ரில் கூறினார்.
“குப்பன் ‘ஜெட்பூட்ஸ்’ அல்லது ‘ஹரிமாவ் பிந்தாங் புலாவ் பினாங்கு’ என்ற புனைப்பெயரால் மிகவும் விரும்பப்பட்ட வீரராகவும் பயிற்சியாளராகவும் விளங்கினார்.
“1961 சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா தங்கப் பதக்கம் வெல்ல உதவிய தேசிய அணி வீரர்களில் ஒருவராக அவர் நினைவுக்கூறப்படுகிறார்.
அதுமட்டுமல்லாமல், 1958 இல் பினாங்கு அணி HMS மலாயா கோப்பையை வெல்ல உதவினார். மேலும், தேசிய அணி காற்சட்டையை அணிந்து மெர்டேக்கா காற்பந்து விழா போட்டியினையும் வென்றார்,” என்று அவர் மேலும் கூறினார்.
குப்பன் 1958 முதல் 1965 வரை எட்டு ஆண்டுகள் நாட்டைப் பிரதிநிதித்து விளையாடியதாக சாய்ரில் கூறினார்.
“அவர் 10 முறை(musim) பினாங்கு மாநிலத்தைப் பிரதிநிதித்து விளையாடியுள்ளார், இதில் 1962 ஆண்டு முதல் மாநில காற்பந்து அணித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1967 இல் பணி ஓய்வு பெற்றார்,” என்று தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினருமான அவர் விவரித்தார்.
இதற்கிடையில், ஜாலான் ஜிரான் 1 ஐ எம். குப்பன் என்று பெயர் மாற்றுவதற்கான தனது பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்ததற்காக பினாங்கு மாநில அரசாங்கத்திற்கு சத்தீஸ் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“அதுமட்டுமின்றி, முந்தைய காலத்தில் அச்சாலைக்கு அருகில் உள்ள திடலில் தான் எப்போதும் பயிற்சி மேற்கொள்வேன்,” என்றார்.
1936 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி பிறந்து பட்டர்வொர்த்தில் குடியேறிய எம்.குப்பன் ஏழு உடன்பிறப்புகளில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இல்லற வாழ்க்கையில் மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையும் ஆவார்.
1958 இல் பினாங்கு துறைமுக ஆணையத்தில் 31 ஆண்டுகள் குமாஸ்தாவாக தனது பணியை ஆற்றினார்.
2005 ஆம் ஆண்டில், பகாங் சுல்தானிடமிருந்து Darjah Indera Mahkota Pahang (DIMP) எனும் டத்தோ பட்டமும் மற்றும் 2013-ஆம் ஆண்டு பினாங்கு ஆளுநரிடம் இருந்து Darjah Setia pangkuan Negeri (DSPN) எனும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அவர் 2021 டிசம்பர்,30 நாள் அன்று தனது 85வது வயதில் காலமானார்.