சுங்கை பாக்காப் – செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) நிர்வாகப் பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தத் தவறினால், இந்த ஜூலை மாதம் முதல் வழக்குத் தொடரப்பட்டு அதிகபட்சமாக ரிம500 அபராதம் விதிக்கப்படும்.
இங்குள்ள தாமான் தாசெக் முத்தியாராவிற்கு அருகிலுள்ள சி-மார்ட் பேரங்காடியில் நடைபெற்ற ‘Waste To Wealth’ எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை
தொடக்கி வைத்து ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லாய் இதனைத் தெரிவித்தார்.
“நாங்கள் (எம்.பி.எஸ்.பி மற்றும் பினாங்கு மாநகர் கழகம்) திடகழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தத் தவறிய எந்தவொரு தனிநபருக்கும் அல்லது கட்சிக்கும் ரிம500 அதிகபட்ச அபராதம் விதிக்கலாம்,” என்று ஜாவி மாநில சட்டமன்ற உறுப்பினருமான ஜேசன் விளக்கமளித்தார்.
இத்திட்டம் 2016 முதல் அமல்படுத்தத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கவும், மறுசுழற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி சமூகத்திற்குக் கற்பிக்கவும், கழிவுகளை மறுசுழற்சி செய்வது மதிப்புமிக்க ஒன்று மற்றும் வருமானத்தை ஈட்டக்கூடியது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இப்பிரச்சாரம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாம் கழிவுகளைப் பிரித்தெடுப்பது மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை மேலோங்கச் செய்யும் நோக்கத்தில் இப்பிரச்சாரம் கொண்டுள்ளது என ஜேசன் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துரைத்த ஜேசன், தற்போது எம்.பி.எஸ்.பி நிர்வாகப் பகுதியில் மறுசுழற்சி விகிதம் 57.36 சதவீதத்தை எட்டியுள்ளது மற்றும் 2030-க்குள் 70 சதவீத விகிதத்தை அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது.
இதனிடையே, பினாங்கு மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்புச் சட்டம் 2007 (சட்டம் 672) இன் முன்மொழியப்பட்ட பயன்பாடு இன்னும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்பு கழகத்துடன் (SWCorp) கலந்துரையாடல் கட்டத்தில் உள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார்.
முன்னதாக ஜேசன், கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி இங்குள்ள தாமான் அமான்சாரா செத்தியா ஃபொந்தென்ஸ், கெபாலா பத்தாசில் எம்.பி.எஸ்.பி திடக்கழிவு தடயவியல் நடவடிக்கையில் பங்கேற்றப் பிறகு, கடந்த ஜூலை 1, 2024 முதல் இக்கொள்கையை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்தார்.
அனைத்து தரப்பினரும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை வலியுறுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு குறைந்த கார்பன் நகரத்தை உருவாக்குவதோடு, நெகிழ்ச்சி, பசுமையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த செபராங் பிறை நகரத்தை உருவாக்க வித்திடும்.