அண்மையில் பத்து காவான் பண்டார் காசியாவில் ‘டிசைன் வில்லேஜ்’ பேரங்காடி அனைத்துலக ரீதியில் சிறந்த தளமாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என அப்பேரங்காடியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து தமது சிறப்புரையில் குறிப்பிட்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவன் எங்.
பேரா, பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு பகுதியில் வாழும் 5 கோடி மக்களுக்கு இப்பேரங்காடி சிறந்த தேர்வாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். அனைவரின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பொருட்களையும் ஓர் இடத்தில் வாங்கவும் குடும்பத்தினருடன் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிடவும் இப்பேரங்காடி ஏற்ற தளமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பேரங்காடி திறப்பு விழாவின் மூலம் 1,000 வேலை வாய்ப்புகள் அவ்வட்டாரத்தில் வாழும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதோடு, பினாங்கு அனைத்துலக விமான நிலையம் செல்ல 30 நிமிடமும்; ஜோர்ஜ்டவுன் பாரம்பரிய தளத்திற்கு 40 நிமிட இடைவெளியில் இத்தளம் அமைந்துள்ளது.
பத்து காவான் பகுதியில் எகோ சிட்டி, பரமாவுன்ட், ஐக்கிய மற்றும் எஸ்பேன் போன்ற முதலீட்டாளர்களின் வருகை அவ்வட்டாரத்தை வளர்ச்சியடைந்த அறிவார்ந்த நகரமாக பிரகடனப்படுத்த இயலும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர். இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் அபீப் பஹாருடினும் கலந்து சிறப்பித்தார்.