தகுதியான வீடமைப்புத் திட்டப் பராமரிப்பு விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்படுவதில்லை – ஜெக்டிப்

Admin

டத்தோ கெராமாட் – மாநில அரசு இம்மாநிலத்தில் உள்ள தகுதியான பொது மற்றும் தனியார் வீடமைப்புத் திட்டங்களில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிக்கான அனைத்து விண்ணப்பங்களும் உரிய ஒதுக்கீடுகளைப் பெறுவதை எப்பொழுதும் உறுதி செய்யும்.

வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறத் திட்டமிடல்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்துடன் (LPNPP) இணைந்து மாநில அரசு எந்த தகுதியானப் பராமரிப்பு விண்ணப்பத்தையும் புறக்கணிக்காது என்று கூறினார்.

இன்று வரை, மாநில அரசு இம்மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 35,000 பராமரிப்பு பணிகளை உள்ளடக்கிய திட்டங்களுக்கு ரிம330 மில்லியனுக்கும் அதிகமாக நிதியளித்துள்ளது.

“மாநில அரசு LPNPP உடன் தகுதியான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதை உறுதிச்செய்ய தொடர்ந்து முயற்சிக்கும்,” என அருகிலுள்ள மேடான் சாமாக் அருகாமையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், LPNPP தலைமை இயக்க அதிகாரி, முகமட் பைஷி முகமட் யூசோஃப்; LPNPP இன் தலைமை வணிக அதிகாரி, ஃபகுராஸி இப்னு ஒமார் மற்றும் மேடான் சாமாக் மேலாண்மைக் கழகத்தின் பிரதிநிதிகள் மற்றும் அதன் குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பினாங்கு 80 சதவீத
அதிகபட்ச பராமரிப்பு நிதியத்தின் (TPM80PP) கீழ் புலோக் 26 மற்றும் 28ல் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்புகளில் இரண்டு மின்தூக்கிகளை மாற்றுவது மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு
ரிம137,000 செலவாகும், என ஜெக்டிப் கூறினார்.

டத்தோ கெராமாட் தொகுதியில் மட்டும், மேடான் சமாக் உட்பட, மொத்தம் 614 பராமரிப்பு மற்றும் மேம்படுத்தும் திட்டங்களுக்கு கிட்டத்தட்ட ரிம10 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

“எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தொகுதியின் பிரதிநிதி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் இம்மாநில பொது மக்களுக்குத் தொடர்ந்து சேவை வழங்க உறுதி கொள்வேன், என்றார்.

“மேலும், கூட்டரசு மட்டத்திலும் வீடமைப்புத் திட்டப் பராமரிப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, LPNPP மற்றும் எனது தரப்பிலும் மக்களுக்கு வசதியான வீடு இருப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்,” என்று அவர் விளக்கமளித்தார்.

மேடான் சமாக்கில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மீண்டும் வர்ணம் பூச எண்ணம் கொண்டுள்ளதாக ஜெக்டிப் கூறினார்.

“இந்த அடுக்குமாடி
நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட வர்நம் பூசும் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்,” என்று ஜெக்டிப் மேலும் கூறினார்.