ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இம்மாநிலத்தில் தகுதிப் பெற்ற வீடமைப்புத் திட்டங்களின் பராமரிப்புப் பணிகள் செயல்படுத்த தொடர்ந்து முனைப்புக் காட்டும்.
பொது மக்கள் மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கு மின்தூக்கி, தண்ணீர் தொட்டிகள் போன்ற பராரிப்புப் பணிகள் செய்வது அவசியம் என மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி,
கிராமப்புற மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழுத் தலைவர் ஜெக்டிப் சிங் டியோ இவ்வாறு கூறினார்.
“கடந்த 2008 முதல் இந்த ஆண்டு அக்டோபர்,9 வரை பினாங்கில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தகுதியான வீடமைப்புத் திட்டங்களில் பல்வேறு பராமரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசு ரிம285.67 மில்லியன் செலவழித்துள்ளது.
“பொது மக்கள் தங்கள் வீடமைப்புத் திட்டங்களின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உதவுவதற்காக மாநிலத்தில் பல்வேறு பராமரிப்பு நிதியம் உள்ளது.
“பொது வீடமைப்புப் பராமரிப்பு நிதியம் ரிம210,847,206; பினாங்கு மாநகர் கழகம் (ரிம24,457,461) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (ரிம4,435,956) கீழ் உள்ள வீடமைப்புப் பராமரிப்பு நிதியம் மற்றும் பினாங்கு அதிகபட்சம் 80% வீட்டுப் பராமரிப்பு நிதியம் (TPM80PP) ரிம45,931,523 என மாநில அரசு
பராமரிப்புப் பணிகளுக்கு இதுவரை ரிம285.67 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
மாநிலத்தின் தகுதியான வீடமைப்புத் திட்டப் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,” என செருவான் இமாஸ் குடியிருப்புக்கு இன்று வருகை அளித்த போது செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
மாநில அரசு அடுத்த ஆண்டுக்கான பொது வீட்டுவசதி பராமரிப்பு நிதியம் மற்றும் TPM80PP நிதியம் செயல்படுத்த மத்திய அரசிடம் ரிம100 மில்லியன் நிதி ஒதுக்கீடு விண்ணப்பித்துள்ளது.
செருவான் இமாஸ் அடுக்குமாடி குடியிருப்பின் TPM80PP விண்ணப்பத்தை மாநில அரசு அங்கீகரித்துள்ளதாக ஜெக்டிப் அறிவித்தார்.
“இது இக்குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டிகளுக்கான பம்ப் அமைப்பை மாற்றுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
“இச்சூழல் பொது மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது.
“இந்த பராமரிப்புப் பணிக்கான மொத்த செலவு ரிம24,800 ஆகும். இதில் 80% செலவினத்தை மாநில அரசு ஏற்கிறது.
“மீதமுள்ள 20% செலவினத்தை செருவான் இமாஸ் நிர்வாகக் கழகம் ஏற்கத் தயாராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.