பினாங்கில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வருடாந்திர தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு இன்னும் பிரமாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் டிஜிட்டல் பினாங்கு இடையிலான ஒத்துழைப்பு மூலம் கடந்த ஆண்டு ‘பத்திரிகை மற்றும் தேர் டிராக்கர்’ (Pathrikai and Chariot Tracker) எனும் கைபேசி செயலி அறிமுகம் கண்டது.
இந்த ஆண்டு, இந்த செயலி கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
“இந்த செயலி பயனர்கள் தங்கத் தேரின் ஊர்வலத்தை கண்காணிக்க உதவுகிறது, இதனால் பக்தர்கள் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை சிறப்பாகப் பெற முடியும்.
தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது எந்த குறிப்பிடத்தக்க தருணங்களையும் தவறவிடாமல் இருப்பதற்குத் துணைபுரிகிறது.
“இந்த மேம்படுத்தப்பட்ட செயலி இப்போது அதிக துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் கொண்டாட்டத்தின் புதுப்பிப்புகளை வழங்குகிறது. இதனால் பக்தர்கள் தங்கள் ஆன்மீக நடவடிக்கைகளை இரதத்தின் பாதையில் ஒருங்கிணைப்பதை எளிதாக்குகிறது.
“பக்தர்கள் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தி தங்கத் தேரை இலகுவாக கண்காணிக்க முடியும். இது இரதத்தை வரவேற்கவும் கௌரவிக்கவும் சிறந்த தயாரிப்புகளை அனுமதிக்கிறது,” என இந்து அறப்பணி வாரிய துணைத் தலைவரும் செனட்டருமான டாக்டர் லிங்கேஸ்வரன் கூறினார்.
தைப்பூசத்தின் முக்கிய சிறப்பம்சமான தங்கத் தேர் ஊர்வலம், பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 6.00 மணிக்கு குயின் ஸ்ரிட், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் இருந்து அதன் பயணத்தைத் தொடங்கும்.
பின்னர், அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலை வந்தடையும். அங்கு அது மறுநாள் வர திட்டமிடப்பட்டுள்ளது. தைப்பூசக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, மீண்டும் பிப்ரவரி,13 ஆம் தேதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்குத் திரும்பும்.
மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அணுகல் மற்றும் சிறந்த திட்டமிடலுடன், பினாங்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கண்கவர் தைப்பூச கொண்டாட்டத்தைத் தயார் செய்து வருகிறது.
இந்த ஆண்டு 1.5 மில்லியனுக்கும் அதிகமாக பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் வருகையளிப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தைப்பூசம் என்றாலே அதிகமான மக்கள் கூட்டத்தை ஈர்ப்பதில் மிகவும் பெயர் பெற்றது. மலேசியாவிலிருந்து மட்டுமல்ல, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் வகையில் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், பக்தர்களின் வருகையை ஈடுகட்ட தீவிரமான முன் ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
“இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டம் பள்ளி விடுமுறை நாட்களுடன் இணைந்து வருவதால், வருகையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“உள்ளூர் மற்றும் அனைத்துலக ரீதியில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்கள் மற்றும் வருகையாளர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று ஸ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போது இராயர் கூறினார்.