தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க பினாங்கு முன்வைத்த திட்டத்தை மத்திய அரசு ஏற்றது.

Admin
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு நீர் விநியோக வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஜசானி மைடின்சா.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு நீர் விநியோக வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஜசானி மைடின்சா.

சூப்பர் எல்-நினோ பருவ மாற்றத்தால் வடக்குக்கரை மாநிலங்களான பெர்லிஸ், கெடா,பினாங்கு மற்றும் பேராக் மாநிலங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. அண்மையில் இந்நீர் பற்றாக்குறையை களைய பினாங்கு நீர் விநியோக வாரியம் ஆற்றல், பசுமை, தொழில்நுட்பம் மற்றும் நீர் அமைச்சுடன் (KeTTHA) புத்ரா ஜெயாவில் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டது என தென் செபராங் பிறையில் அமைந்துள்ள நீர் விநியோக வாரிய அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் அதன் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் ஜசானி மைடின்சா.
புத்ரா ஜெயாவில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தின் போது பினாங்கு நீர் விநியோக வாரியம் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சு ஏற்றுக்கொண்டது என குறிப்பிட்டார். அவற்றுள், மேக விதைத்தூவல் வழி செயற்கை மழையை அதிகப்படுத்துதல், நீர்ப் பாசனத்தை நிறுத்துதல், அணையிலிருந்து நீரை திறந்து விடுதல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேலோங்க செய்தல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தது. இக்கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசு பரிசீலனை செய்ததோடு ஏற்றுக்கொண்டது.
மூடா மற்றும் பெரிஸ் அணைகளில் நீரின் அளவு ஆபாயக்கட்டத்தில் இருப்பதாகவும் இந்நிலையை தவிர்க்க மத்திய அரசு செயற்கை மழையை அதிகளவில் பொழிய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நம் நாட்டின் மிக பழமையான புக்கிட் மேரா அணைக்கு நிகழ்ந்த அவலநிலை பினாங்கு மாநிலத்திற்கு ஏற்படக்கூடாது என்றார். ஆனால், தற்போது பினாங்கு மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீர் போதுமான அளவு இருக்கிறது என நம்பிக்கை தெரிவித்தார் ஜசானி மைடின்சா. சூப்பர் எல்-நினோ பருவநிலை ஜூன் இறுதிவரை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் நீரை சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.