கெபூன் பூங்கா – மாநில முதல்வராகப் பதவியேற்றப் பின் கலந்து கொள்ளும் முதல் தைப்பூசத் திருவிழா என அகம் மகிழத் தெரிவித்தார். 233-வது ஆண்டாகக் கொண்டாடும் இத்தைப்பூசத் திருவிழாவை சிறப்பாக வழிநடத்தும் இந்து அறப்பணி வாரியம், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான நிர்வாகம் மற்றும் குவின் ஸ்திரிட் மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ரிம200,000 மானியம் வழங்குவதாகக் கூறினார். மாநில அரசு கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மானியத்தை இரட்டிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்படும் வருடாந்திர மானியமும் ரிம1.75மில்லியனிலிருந்து ரிம2.0 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பாலர்ப்பள்ளிக்கு (ரிம150,000) , தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதியம் ( ரிம150,000) என கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.
நம்பிக்கைக் கூட்டணி அரசு பினாங்கு வாழ் இந்தியர்களின் நலனுக்காகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களையவும் துணைபுரிகிறது என முதல்வர் தெரிவித்தார்.
பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு நாடு முழுவதிலிருந்தும் பக்த கோடி பெருமக்கள் தங்கள் நேர்த்திக்கடன் மற்றும் காணிக்கைகளைச் செலுத்த அலைகடல் போல் திரண்டனர். ஏறக்குறைய 1.0 மில்லியன் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் வருகையளிப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்விற்கு நிதி அமைச்சர் மேதகு லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, புலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்தபர் லீ சூன் கிட், இந்து அறப்பணி வாரிய தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ இராமசந்திரன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூடிய விரைவில் மோனோ இரயில் அல்லது திராம் விரைவு இரயில் சேவை கட்டவிருப்பதாக
மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி கூறினார். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அடிவாரத்தில் இருந்து முருகப் பெருமானின் மூலஸ்தானத்திற்குச் செல்வதற்கு இலகுவாக இருக்கும் என்றார்.
மேலும், தண்ணீர்மலை ஆலய வளாகத்தில் மற்றொரு சிறப்பு அம்சமாக ஸ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலயம் நிர்மாணித்து கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இவ்வாண்டு பக்தர்கள் இருமுடி காணிக்கைச் செலுத்த அனுமதிக்கப்பட்டனர் என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.