பினாங்கு நீர் கட்டணத்தை தபால் நிலையத்தில் செலுத்தும் பயனீட்டாளருக்கு சேவைக் கட்டணமாக ரிம0.90 சென் விதிக்கப்படுகிறது. ஆனால் தபால் நிலையத்தில் அதிரடியாக அக்கட்டணம் ரிம0.90 இருந்து ரிம1.50-ஆக விலையேற்றம் கண்டுள்ளது. மாநில அரசு மற்றும் பினாங்கு நீர் வாரியம் இந்தக் கட்டண உயர்வை நிராகரித்துள்ளனர். 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியே பயனீட்டாளர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்துகின்றனர். இதற்கு முன்னதாக அந்தக் கட்டணச் செலவை பினாங்கு நீர் விநியோக வாரியம் ஏற்றுக் கொண்டது என தெரிவித்தார் பொதுப்பணி, பயன்பாடுகள்(நீர்,சக்தி & தொலைப்பேசி) மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங் தெரிவித்தார்.
தபால் நிலையத்தில் கட்டணத்தைச் செலுத்துவதற்கு விதிக்கப்படும் சேவைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் கெடா மாநில அரசு அந்நிலையத்தை நிராகரித்துள்ளது. இருப்பினும், பினாங்கு மாநில அரசு தபால் நிலையத்தில் செலுத்தும் பயனீட்டாளர்கள் கூடுதல் சேவைக் கட்டணமாக ரிம0.90 சென் செலுத்த வேண்டும். அதே வேளையில் மற்ற இடங்களில் கட்டப்படும் நீர் கட்டணத்திற்குக் கூடுதல் சேவைக் கட்டணம் விதிக்கப்படாது என்றார். 2013-ஆம் ஆண்டு, பினாங்கு நீர் வாரியம் 471,466 பயனீட்டாளர்களுக்கு நீர் பயன்பாட்டிற்காக ரிம67.5மில்லியன் மானியமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் அனைத்து மாநில நீர் வாரியங்களை ஒப்பிடுகையில் பினாங்கு மாநிலம் மட்டுமே மிகக் குறைவானக் கட்டணத்தை விதிக்கின்றது.

பினாங்கு வாழ் மக்கள் பினாங்கு நீர் வாரிய அலுவலகங்கள், தேசிய மின்சார வாரியம், பினாங்கு & செபராங் பிறை நகராண்மைக் கழகங்கள், பினாங்கு மேம்பாட்டுக் கழகம் , மலேசிய தொலைத்தொடர்பு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சேவை கட்டணம் இன்றி நீர் கட்டனம் செலுத்த வரவேற்கப்படுகின்றனர். இந்தச் சேவைக் கட்டணத்தை தபால் நிலையம் தான் விதிக்கிறது எனவும் பினாங்கு நீர் வாரியத்திற்கும் மாநில அரசிற்கும் தொடர்பு இல்லை என்றும் தெளிவுப்படுத்தினார் ஆட்சிக்குழு உறுப்பினர்.}