பிறை – தமிழரின் பாரம்பரியமும் மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும், ஏனெனில் அது ஒரு சமூகத்தின் அடையாளம் என பினாங்கு வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.
ஒரு சமூகத்தின் மரபுகள் மற்றும் மொழி, குறிப்பாக, எதிர்கால சந்ததியினர் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய பாதுகாக்கப்பட வேண்டும். மாறாக, நாம் மறந்துவிடக் கூடாது. இது நமது வேர்களையும் வரலாற்றையும் இணைக்கும் தூண்களாகும் என சாய் லெங் பார்க் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சுந்தராஜூ இவ்வாறு கூறினார்.
தமிழ் சமூகத்தின் ஞானம் மற்றும் துணிச்சலின் செழுமையான வரலாற்றை எடுத்துரைத்து, மொழி, மதம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதன் மூலம் தமிழ் பாரம்பரியத்தைப் பராமரிக்க முடியும் என வலியுறுத்தினார்.
“தமிழ்ப் பாரம்பரியத்தை நிலைநாட்ட முதலில் தமிழ் மொழியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். தை மாதம் தொடங்கும் போது, வாய்ப்புகள் உருவாகின்றன, ‘ராஜு’ வரும்போது, ஒரு வழிப் பிறக்கிறது,” என்று நம்பிக்கையையும் புதுப்பித்தலையும் அடையாளப்படுத்தினார்.
பிறை சட்டமன்ற உறுப்பினருமான, சுந்தராஜு இந்தியச் சமூகத்துடனான தனது ஆழமானத் தொடர்பைப் பகிர்ந்து கொண்டார். தமிழர்களின் உலகளாவிய முனேற்றம் மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டினார்.
“இந்தியர்கள் உலகளவில் பல சாதனைகளைப் படைந்துள்ளனர், குறிப்பிடத்தக்க திறன்களையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். நாம் ஒற்றுமையாக இருந்து, ஒரு சமூகமாக இன்னும் பெரிய வெற்றியைப் பெற பாடுப்படுவோம்,” என்று அவர் கூறினார்.
பிறையில் பொங்கல் கொண்டாட்டம் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் (PHPDC) இந்தியர் கழகத்தின் ஆதரவுடன் ஏற்பாடுச் செய்யப்பட்டது.
இதற்கிடையில், பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் (PDC) தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அஜிஸ் பக்கார், சமூகங்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதில் பொங்கல் போன்ற பண்டிகைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டார்.
“இத்தகைய கொண்டாட்டங்கள் இனம் அல்லது மதம் பாராமல் மக்களை ஒன்றிணைத்து நல்லிணக்கத்தை வலுப்படுத்துகின்றது,” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பூ கட்டுதல், கோலம் வரைதல், உறி அடித்தல் மற்றும் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சியில் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம் மற்றும் பினாங்கு மாநகர் கழக மேயர் டத்தோ இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ் சமூகத்தின் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.