தாமான் பிரி ஸ்கூலில் அதிகமான இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் – ஜக்தீப்

டத்தோ கெராமாட் – தாமான் பிரி ஸ்கூலில் மேலும் பாதுகாப்பை வலுப்படுத்த, பினாங்கு மாநகர் கழகம் (MBPP) சமீபத்தில் 15 இரகசிய கண்காணிப்பு கேமராக்களை அப்பகுதியில் நிறுவியதுள்ளது.

மனித மூலதன மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆட்சிக்குழு உறுப்பினரும் இரண்டாம் துணை முதல்வர் ஜக்தீப் சிங், இந்த இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் L, M மற்றும் N புலோக்குகளில் தத்தம் பொருத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

“தாமான் பிரி ஸ்கூல் எப்போதுமே என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். மேலும், இது பினாங்கில் கட்டப்பட்ட மிகப் பழமையான பொது வீடமைப்புத் திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தக் குடியிருப்புப் பகுதியில், இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் தவிர, மின்தூக்கி மேம்படுத்தல் மற்றும் மின்சாரப் பணிகள் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளோம்.

“நாங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மீண்டும் வர்ணம் பூசும் பணியைத் தொடர்வோம்,” என்று அண்மையில் ஜக்தீப் தாமான் பிரி ஸ்கூலுக்குச் சென்றபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

 

முன்னதாக, அங்கு மொத்தம் ஆறு இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும், சி.சி.டி.வி செயல்பாட்டு மையம் காவல்துறையுடன் இணைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினரான ஜக்தீப், மாநில அரசு குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தாமான் பிரி ஸ்கூல் பகுதியில் அதன் பராமரிப்புப் பணிகளைத் தொடரும் என்று உறுதியளித்தார்.

தாமான் பிரி ஸ்கூலில் மின் தூக்கி மேம்படுத்துதல், புதிய மின் தூக்கி மாற்றுதல், மீண்டும் சாயம் அடித்தல் மற்றும் மின்சாரம் பழுதுபார்க்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மொத்தம் ரிம3.2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜக்டிப் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.