பத்தாண்டுகள் தேசிய முன்னணி அரசால் கைவிடப்பட்ட தாமான் மூராய் ஜெயா இரண்டாம் கட்ட வீடமைப்புப் பகுதி பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசின் முயற்சியால் அதன் மேம்பாட்டுப் பணிகள் நிறைவுப்பெற்று வீடமைப்புத் திட்ட நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழ் (Sijil Kelayakan Menduduki) வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
2007-ஆம் ஆண்டு செபராங் பிறை நகராண்மைக் கழகத்தால் மக்மாவிஸ் பத்தாவ் தனியார் நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதம் வழங்கியும் 2010-ஆம் ஆண்டு வரை அவ்வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. அதன் பின்னர், மலேசிய கட்டிடம் சங்க பெர்ஹாட் நிறுவனம் மாநில அரசுடன் ஒத்துழைத்து இக்கட்டுமானப் பணியை நிறைவுச் செய்தது என தமதுரையில் குறிப்பிட்டார் முதல்வர். இரண்டாம் கட்ட தாமான் மூராய் ஜெயா வீடமைப்புத் திட்டத்தில் ரிம328,000 மதிப்புள்ள 24 இரட்டை மாடி வீடுகளும் 19 இரண்டு மாடி வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
செபராங் பிறையில் மட்டும் ஏழு வீடமைப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அதில் ஆறு வீடமைப்புத் திட்டங்களின் வழி 1,600 வீடுகள் மாநில அரசின் முயற்சியில் கட்டப்பட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார். இதில் வட செபராங் பிறையில் அமைந்துள்ள தாமான் சிங்காசானா புத்ரா வீடமைப்புத் திட்டம் முழுமையடைய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் குறிப்பிட்டார்.