ஜார்ஜ்டவுன்- மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி எந்த சூழ்நிலையிலும் தாய் மொழி பள்ளிகள் தற்காக்கப்படும் என மாநில சட்டமன்றத்தில் சூளுரைத்தார்.
தாய் மொழி பள்ளிகளின் உருவாக்கம் ஒரு போதும் மலேசியர்களின் ஒற்றுமைக்குத் தடைக்கல்லாக அமையாது என கூறினார். தாய் மொழி பள்ளிகளில் தேசிய மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றார்.
14வது சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் தவணைக்கான இரண்டாவது சந்திப்புக் கூட்டத்தில் சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் முகமது யூசோப் முகமது நோரின் வாய்மொழி கேள்விபதில் அங்கத்தில் பேராசிரியர் இவ்வாறு பதிலளித்தார்.
தாய் மொழி பள்ளிகளில் பிற இன மாணவர்கள் குறிப்பாக தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளிகளில் பயிலும் போது பல்லின மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தலாம் என முகமது யூசோப் கூறினார்.
மாநிலப் பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலதன மேம்பாடு, தொழில்நுட்பம் & புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் மாநில அரசு தாய் மொழி பள்ளிகள் மலேசியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என குறிப்பிடும் சில தரப்பினர்களின் கருத்துக்கு உடன்பாடு தெரிவிக்காது. பள்ளி என்பது இனம், கலாச்சாரம் மற்றும் இன வேற்றுமை கொண்ட பல்லின மாணவர்கள் சமத்துவம், மரியாதை மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் கற்றுக்கொள்ளும் பாடசாலையாகும் என விளக்கமளித்தார்.
பினாங்கு மாநில கல்வி இலாகா புள்ளி விபரப்படி தாய் மொழி பள்ளிகளில்
3,552 சீன மற்றும் இந்திய இன அல்லாத மற்ற மாணவர்களும் பயில்கின்றனர் என உறுதியாகிறது. இது பினாங்கு வாழ் மக்கள் மற்றும் மலேசியர்களிடையே உள்ள நல்லிணக்கத்தைப் பறைச்சாற்றுகிறது என விளக்கமளித்தார்.
62 ஆண்டுகள் சுதந்திரத்திற்குப் பின் எதிர்க்கட்சி தரப்பினர் தாய் மொழி பள்ளிகள் உருவாக்கம் குறித்து கேள்வி எழுப்புவதைப் பற்றிய இராமசாமியின் நிலைப்பாடுப் பற்றி பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் மத்திய அரசியலமைப்பின் ‘Artikel 12(1)(b) dan Artikel 152(1)(a) & (b)’கோட்பாடுகளுக்குச் சவாலாக அமைகிறது. இந்த அரசிலமைப்பில் பழங்குடி மக்களின் மொழி கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றைத் தெளிவாக அங்கீகரிக்கப்படுகிறது.
மத்திய அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை மட்டுமே நிலைநிறுத்த மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்று ராமசாமி வலியுறுத்தினார்.
மாநில அரசு கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிதியுதவி வழங்கி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு (2019), முபாலிக், சீன மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ரிம 8.4மில்லியனும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம 2.0 மில்லியனும் வழங்கியது. அதேவேளையில் இஸ்லாம் மத கல்வி பாடசாலைகளுக்கு ரிம2.5 மில்லியன் மற்றும் தேசிய பள்ளி மற்றும் தேசிய இடைநிலைப்பள்ளிகளுக்கு ரிம 3.0 மில்லியன் வழங்கப்பட்டது. மாநில அரசு அனைத்து பள்ளிகளுக்கும் குறிப்பாக தாய் மொழி பள்ளிகளுக்கும் கல்வி நிதியுதவி வழங்கி பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.