தீ பாதுகாப்பு பிரச்சாரம் பொது மக்களிடையே விழிப்புணர்வை மேலோங்கச் செய்கிறது

Admin
img 20231129 wa0182

பிறை – அண்மையில் ‘ஒரு வீட்டிற்கு ஒரு தீயை அணைக்கும் கருவி’ எனும் தீ பாதுகாப்பு பிரச்சாரம் மற்றும் தாமான் பிறை, தாமான் இமாஸ் சமூக தீயணைப்பு தன்னார்வலர்கள் அமைப்பின் துவக்க விழா இனிதே நடைபெற்றது.

தாமான் பிறை, தாமான் இமாஸ் குடியிருப்பாளர் சங்கம்; பிறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக சேவை மையம், பிறை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், தாமான் பிறை ருக்கூன் தெத்தாங்கா (KRT) மற்றும் தாமான் பிறை சிவில் சமூகம் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது.
img 20231129 wa0176

பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தனது தொடக்க உரையில், பொது மக்களிடையே தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேலோங்கச் செய்ய இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைகிறது, என்றார்.

“இந்நிகழ்ச்சி சிறிய முயற்சியாக கருதப்பட்டாலும் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், திடிரென்று தீ விபத்துகள் ஏற்படும் வேளையில், பொது மக்கள் உயிர் மற்றும் உடைமைகளை காப்பாற்ற முடியும். அதேவேளையில், உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்நிகழ்ச்சி வழிகாட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
img 20231129 wa0179
“மேலும், பொது மக்களுக்குத் தீயை அணைக்கும் கருவியைக் கொண்டு அதனை அணைக்கும் வழிமுறைகள் மற்றும் உரிய பாதுகாப்பு உதவி பெறும் வரை எடுக்க வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகள் குறித்த விளக்கவுரை நடத்தப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரால் தீயணைக்கும் செயல் விளக்க அமர்வு நடைபெற்றது, என எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை விக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதியதாக அமைக்கப்பட்ட சமூக தீயணைப்புத் தன்னார்வலர் அமைப்பிற்கு மொத்தம் 52 தீயணைப்பு கருவிகள் ஒப்படைக்கப்பட்டன, என்றார்.

மேலும், பினாங்கு மாநில அமைப்புப் பதிவுத் துறை, பரிவுமிக்க சமூக அமைப்பு மானியம் எனும் திட்டத்தின் கீழ் தாமான் பிறை, தாமான் இமாஸ் குடியிருப்பாளர் சங்கத் தலைவர் துரைசிங்கம் அவர்களிடம் ரிம10,000 மானியத்தை வழங்கியது.

இத்திட்டத்தின் மூலம் , பொது மக்கள் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் எதிர்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து நன்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தீ அணைப்பு கருவியைப் பயன்படுத்தும் வழிமுறைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இது பொது மக்களிடையே விழிப்புணர்வை மேலோங்கச் செய்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

மேலும், பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பொது விழிப்புணர்வுக் கிளையின் தீயணைப்பு உதவித் தலைவர் ஜராயிம் ஹாஜி முகமது லாசிம், பினாங்கு மாநில அமைப்புப் பதிவுத் துறையின் பிரதிநிதி இயக்குநர் மஸ்லான் ஹாஷிம், மத்திய செபராங் பிறை மாவட்டத் தகவல் அதிகாரி நஸ்லியா நைம், தாமான் பிறை குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர் துரைசிங்கம் மகாலிங்கம், எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை விக்டர் மற்றும் சில உள்ளூர் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.