ஜெலுத்தோங் – வருகின்ற அக்டோபர் 27-ஆம் நாள் கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் மற்றும் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம் இணைந்து வசதி குறைந்த குடும்பங்களுக்குத் தீபாவளி பரிசுக்கூடை வழங்கினர்.
இசான் இளைஞர் சமூகநலச் இயக்கம் (Pertubuhan Kebajikan Ehsan Muda) ஏற்பாட்டில் நான்காவது முறையாக நடைபெறும் இந்நிகழ்வில் ஏறக்குறைய 20 வசதி குறைந்த குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், வழங்கப்பட்டன. இந்த இயக்கம் நமது நாட்டில் கொண்டாடும் அனைத்து முக்கிய பண்டிகையின் போதும் பரிசுக்கூடை வழங்கி சிறப்பிப்பது பாராட்டக்குறியதாகும்.
“பெருநாள் கொண்டாட்ட காலத்தில் பொது மக்களுக்குக் குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் கொண்ட பரிசுக்கூடை வழங்குவதன் மூலம் அவர்களின் பொருளாதார சுமையைக் குறைக்க முடிகிறது,” என புக்கிட் டும்பாரில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து நேதாஜி இராயர் இவ்வாறு தெரிவித்தார்
கூடிய விரைவில் கொண்டாடவிருக்கும் தீபத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தீபாவளி பண்டிகை வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக அனுசரிக்கப்படுவதோடு தீபத் திருநாள் என்றும் அழைக்கப்படும் .
இந்நிகழ்வில் இசான் இளைஞர் சமூகநலச் இயக்கத் தலைவர் அர்ஷத் ரஹ்மான், பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் நிக்கோலஸ் தெங் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் லிம் சுயூ கிம் ஜாலான் புக்கிட் கும்பார் சாலை மேம்பாட்டுத் திட்டத்தையும் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தனர். இத்திட்டத்தில் சாலை, பாதசாரி நடைபாதை மற்றும் வடிகால் அமைப்பு மேம்படுத்தப்பட்டது. ஜெலுத்தோங் நாடாளுமன்ற அலுவலக நிதி ஒதுக்கீட்டில் (ரிம41,000) இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.