ஜார்ச்டவுன் – இன்று மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் மற்றும் ஓம் சக்தி பக்தர்கள் சங்கம் இணை ஏற்பாட்டில் சிறைக் கைதிகளுக்குத் தீபாவளி பலகாரங்கள் வழங்கப்பட்டன.
‘தீபம்’ என்றால் ஒளி என்று பொருள்படும். எனவே, இருள் நீக்கி ஒளித் தரும் பண்டிகையே தீபாவளி என அழைக்கப்படுகிறது. இப்பண்டிக்கையை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறைக் கைதிகளுக்கும் பலகாரங்கள் வழங்கப்படுகின்றன, என மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் நந்தகோபால் தெரிவித்தார்.
பொதுவாகவே, அரசு சாரா இயக்கங்கள் வசதிக் குறைந்த பொது மக்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்கள் சார்ந்த தரப்பினருக்குத் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் வேளையில் இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் சிறைக் கைதிகளும் இக்கொண்டாட்டத்திலிருந்து தனித்து விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 22 ஆண்டுகளாக இந்த பலகார அன்பளிப்பு வழங்கி வருவதாக ந.தனபாலன் மேலும் தெரிவித்தார்.
இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் மற்றும் ஓம் சக்தி பக்தர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கடந்த அக்டோபர் 19-ஆம் நாள் தீபாவளி பலகாரங்களைத் தயார் செய்தனர். அன்றையத் தினம் இந்தியர்களின் பாரம்பரிய பலகார வகையான முறுக்கு, அதிரசம் மற்றும் பல இனிப்பு வகைகளும் சேர்க்கப்பட்டுப் பொட்டலமாகத் தயாரிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு வருகையளித்தார்.
கடந்த அக்டோபர் 23-ஆம் நாள், தயார் செய்யப்பட்ட 3,800 பலகாரப் பொட்டலங்களை பினாங்கு சிறைச்சாலைக்கு 1,500 பொட்டலமும் ஜாவி சிறைச்சாலைக்கு 2,000 பொட்டலமும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பினாங்கு சிறைச்சாலை தலைமை இயக்குநர் அமாட் கமாருடின் பின் யூசோப், பட்டர்வொர்த், ஓம் சக்தி ஆன்மீக பக்தர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாமன்றத்தின் ஏற்பாட்டில் சிறைக் கைதிகள் குற்றச்செயல்களிலிருந்து விடுப்பட்டு சிறந்த மனிதராக உருமாற்றம் காணும் பொருட்டு கடந்த 34 வருடங்களாக பினாங்கு சிறைச்சாலையில் சமயம் மற்றும் நன்னெறி வகுப்பு பிரத்தியேகமாக இந்தியர்களுக்காக ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்பு ஜாவி சிறைச்சாலையிலும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டக்குரியதாகும்.