பினாங்கு மாநில தைப்பூசத்திற்கு அடுத்து இந்துக்களின் மிக சிறந்த விழாவாக தெலோக் பஹாங்கில் அமைந்துள்ள ஶ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்படும் தெப்பத் திருவிழா திகழ்கிறது . மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் இவ்விழா மிக விமரிசையாக ஶ்ரீ சிங்கமுக ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் பினாங்கு மாநில பக்தர் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் அம்பாளின் நல்லாசி பெற வருகைப்புரிகின்றனர்.
இவ்வாண்டு தெப்பத் திருவிழா கொண்டாட்டத்திற்கு 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் அலைக்கடலென வருகை புரிந்தனர். மிதவை வண்ண விளக்குகளைக் கொண்டு மிதக்கும் தேராக்கி மங்கள வாத்தியம் முழக்கத்துடனும் வான வேடிக்கையுடனும் ஶ்ரீ சிங்கமுக காளியம்மனை கடலில் பவனி வரச் செய்வது இவ்விழாவின் தனிச் சிறப்பாகும்.
இதனிடையே, பல வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தீப விளக்குகளை கடலில் மிதக்க விடுவது இவ்விழாவின் கூடுதல் சிறப்பம்சமாகும். அம்பாளிடம் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு இத்தீப தெப்ப விளக்குகளை கடலில் மிதக்க விடுகின்றனர்.