நம் நாடு சுதந்திரம் அடைந்து 58-வது சுதந்திர தினத்தை கூடிய விரைவில் கொண்டாடவிருக்கிறோம். இதனை மெருகூட்டும் வகையில் பினாங்கு மாநில அரசு “தேசிய கொடியைப் பறக்க விடுவோம்” என்ற பிரச்சாரத்தை பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 16-ஆம் திகதி பினாங்கு பரோகன் பேரங்காடியில் தேசிய கொடியைப் பறக்க விடுவோம் (Kempen Kibar Jalur Gemilang) எனும் பிரச்சாரம் துவங்கியது.
இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் “ஒரே உள்ளன் ஒரே உணர்வு” என வரவேற்புரையாற்றிய மாநில முதல்வர் மூவின மக்களும் ஒற்றுமையாக இணைந்து நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார். சுதந்திர உணர்வோடு நம் நாட்டு கொடியை வீடு, வாகனம், அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பறக்க விடுவோம் என்றார். மேலும், பினாங்கு மாநில பொருளாதாரம் வளர்ச்சியடைய அல்லும் பகலும் உழைக்கும் பினாங்கு வாழ் மக்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். 2020 தூரநோக்கு திட்டத்தில் பினாங்கு அனைத்துலக ரீதியில் வளர்ச்சியடைந்த மாநிலமாகத் திகழும் என தமது நம்பிக்கையை தெரிவித்தார்.
இப்பிரச்சாரத்தில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் வர்ணம் தீட்டும் போட்டி, படம் வரையும் போட்டி, புதிர்ப்போட்டி, விளையாட்டு போட்டி என சுதந்திர உணர்வுகளைத் தூண்டும் வகையில் அங்கங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஸ்ரீ ரஷிட் அஸ்னோன், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்புச் செய்தனர்.}