ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அண்மையில் நடைபெற்ற தைப்பூசத் தினக் கொண்டாட்டத்தில் பக்தர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உண்டியல் வசூல் ரிம224,775 என அறிவித்தது.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கணக்கிடப்பட்ட மொத்தத் தொகை பக்தர்களிடமிருந்து வந்த நன்கொடைகளிலிருந்து பெறப்பட்டது என அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பிற பணப் பொருட்களின் மதிப்பு கணக்கிடுவதற்காக வங்கிக்கு அனுப்பப்படும்.
இன்று கொம்தாரில் நடைபெற்ற உண்டியல் வசூல் கணக்கெடுப்பிற்கு தலைமை வகித்த பத்து உபான் சட்டமன்ற உறுப்பினரும் அறப்பணி வாரிய ஆணையருமான குமரேசன், தைப்பூசத்தின் போது பக்தர்கள் வழங்கிய நன்கொடைக்கு நன்றித் தெரிவித்தார்.
இன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கொம்தாரில் நடைபெற்ற தைப்பூச நன்கொடை கணக்கெடுப்பு நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த 59 தன்னார்வாலர்கள் கலந்து கொண்டனர்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத் துணைத் தலைவரும் செனட்டருமான டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் தனது உரையில், சேகரிக்கப்பட்ட நிதியை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த சேகரிக்கப்பட்ட பணம் ஆலய மேம்பாடு, கல்வி மற்றும் முக்கியமான முன்முயற்சி திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும், என்றார்.
இந்த உண்டியல் கணக்கெடுப்பின் போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) பிரதிநிதிகளும், காவல்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.