ஆயிர் ஈத்தாம் – தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பினாங்கில் உள்ள காவடி தயாரிப்பாளர்கள் தங்கள் ஆர்டர்களை முடிக்க பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தைப்பூசத் திருவிழாவில் இந்துப் பக்தர்கள் காவடி ஏந்திச் செல்வது இன்றியமையாத அம்சமாகும். பல்வேறு வகையான காவடிகள் காண்பதற்கு இரு கண்கள் போதாது.
காவடி என்பது ஒரு பக்தரின் தோள்களில் சுமந்திருக்கும் ஒரு அரை வட்ட, வளைவு போன்ற அமைப்பாகும். பிரார்த்தனைகள் அல்லது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக முருகப்பெருமானுக்கு பக்தி மற்றும் நன்றி செலுத்தும் செயலாக இது அமைகிறது.
பினாங்கில் காவடி தயாரிப்பாளரான செல்வகுமார் @ சுகு,50 கடந்த 33 ஆண்டுகளாக இந்தத் தொழிலை நேர்த்தியாக செய்து வருகின்றார்.
சுகு தனது 25வது வயது முதல் காவடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். அவர் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே இந்த கலையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பின்பு அதே முழு நேர தொழிலாக மாறியது, என்றார்.
15 வயதிலிருந்தே தனது தொழிலை மெருகேற்றி வரும் செல்வக்குமார், காவடி வடிவமைக்கும் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் தொடர வேண்டியதன் அவசியத்தையும், எதிர்கால சந்ததியினருக்கு அதன் நம்பகத்தன்மையையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் பாதுகாப்பதையும் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி காவடிகளுக்கான ஆர்டர்கள் கிடைத்து வருவதாக சுகு தெரிவித்தார்.
இந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற 18 ஆர்டர்களில் 2 காவடிகள் கெடா, சுங்கைப்பட்டாணிக்கும் 3 காவடிகள் கோலாலம்பூருக்கும், ஒரு காவடி ஜோகூர்பாருவிற்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
“இந்த ஆண்டு 360 பாகையில் சுற்றும் காவடியை வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று முறை இதனை கையாண்டு இறுதியில் இவ்வாண்டு இம்முயற்சி வெற்றிப்பெற்றுள்ளது. இந்த தொழிலில் ஆய்வு செய்து திறன்களை அறிந்து செயல்படுவது முக்கியமானதாகும். தொழில்நுட்பம் உட்பட பல்வேறு கோணத்தில் இதனை அறிந்திருக்க வேண்டும்,” என சுகு தெரிவித்தார்.
வடிவமைப்பு மற்றும் வண்ணங்களின் சிக்கலான தன்மையைப் பொறுத்து ஒரு காவடியை முடிக்க 10 நாட்கள் வரை ஆகும் என்று அவர் கூறினார்.
“நான் குறைவான ஆர்டர் மட்டும்தான் எடுப்பேன். காவடிகளின் தரம் மற்றும் அதன் எடை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒவ்வொன்றையும் மிகுந்த கவனத்துடன் வடிவமைப்பேன்,” என முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலில் சுகு இதனைக் கூறினார்.
“மேலும், எளிய காவடிகளுக்கான (சிறுவர்களுக்கான காவடி) ஆர்டர்களை நாங்கள் தயாரிக்கின்றோம்,” என ஆறு பேர் கொண்ட குழுவினருடன் இத்தொழிலை செய்து வரும் சுகுவை பார்லிமில் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வண்ணங்கள், நுரைகள் (பொலிஸ்திரின்) மற்றும் ஒட்டு பலகைகள் போன்ற மூலப்பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருப்பதை உறுதிசெய்ய நேரடியாக சென்று வாங்குவோம்.
காவடி நீடித்ததாகவும் அழகியல் ரீதியாகவும் கவர்ந்திழுக்கும் வகையில் ஒவ்வொரு கூறுகளும் கவனமாக தேர்வு செய்யப்படுகின்றன.
வடிவமைப்பின் தன்மையைப் பொறுத்து ஒரு பெரிய காவடி ரிம1,800 முதல் ரிம4,000 வரை விலை நிர்ணயிக்கப்படும். இது ஒரு முக்கியமான மற்றும் புனிதமான இந்துப் பண்டிகை என்பதை நாங்கள் அறிவோம். மேலும், நாங்கள் பெறும் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
“தன்னுடைய இத்தனை ஆண்டுகள் அனுபவத்துடன், எதிர்காலத்தில் காவடி வடிவமைப்புகளை அழகு மின்னியல் விளக்குகள் சிற்ப வடிவமைப்புகளுடன் உருவாக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வேன்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.