ஜார்ச்டவுன் – பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவிக்குச் சென்று
மாற்றுத்திறனாளி பக்தர்களும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உதவும் வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) மற்றும் அரசு சாரா அமைப்பான மலேசிய தமிழர் உதவும் கரங்கள் இணைந்து செயல்பட இணக்கம் கொண்டுள்ளது.
வருகின்ற தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அவர்களின் சக்கர நாற்காலியை ஏந்தி கொண்டு தண்ணீர் மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானைக் காண கொண்டு செல்லப்படுவர்.
இந்த முன்முயற்சி திட்டம் வருகின்ற பிப்ரவரி,2 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முயற்சியானது, வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி கொண்டாடவிருக்கும் தைப்பூசத்திற்கு முன்னதாக, தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றவும், ஆசீர்வாதங்களைப் பெறவும், சக்கர நாற்காலியில் உள்ள ஏறக்குறைய 30 பக்தர்கள் தண்ணீர் மலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இந்து அறப்பணி வாரியத் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் இந்த முயற்சியின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது போன்ற அர்த்தமுள்ள, தொண்டு சார்ந்த நிகழ்ச்சிகளில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது என்ற இரட்டிப்பு நோக்கத்தையும் இத்திட்டம் வலியுறுத்துகிறது, என்றார்.
“இந்த நபர்களை பிரதான கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்கு உதவுவதற்காக சுமார் 50 தொண்டுள்ளம் கொண்ட தன்னார்வலர்கள் முன் வந்துள்ளனர்.
(மூலம்:பாலதண்டாயுதபாணி ஆலய முகநூல்)
“இறை வழிபாட்டிற்குப் பின்பு மீண்டு கீழ் தளத்திற்கு இறங்குவதற்கு, செங்குத்தான மற்றும் சவாலான படிகள் காரணமாக நான்கு சக்கர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.
அனைத்து பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, இத்திட்டம் முழுவதும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
இந்த முயற்சியை இந்து அறப்பணி வாரியத் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் தலைமை தாங்குவார். மேலும், ஆர்.எஸ்.என் இராயர் தன்னார்வலர்களுக்கு அவர்களின் தன்னலமற்ற பங்களிப்புகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக பதக்கங்களை வழங்கி கௌரவிப்பார்.
“இந்த முயற்சி வெறும் உடல் உதவி பற்றியது மட்டுமல்ல; இது மாற்றுத்திறனாளிகள் கலாச்சார மற்றும் ஆன்மீக மரபுகளில் பங்கேற்க அதிகாரம் அளிப்பது பற்றியதாகும். இது சமூக உணர்வின் ஒரு அழகான எடுத்துக்காட்டு,” என்று லிங்கேஸ்வரன் மேலும் கூறினார்.
இந்த முன்முயற்சி திட்டத்தில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள்
017-357 6997/013-380 5538/013-367 3710 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புக் கொண்டு முன் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், இத்திட்டத்தை செயல்படுத்தும்
மலேசிய தமிழர் உதவும் கரங்கள் அமைப்பிற்குப் பாராட்டுத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.