நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டை பின்பற்றி மிதமான சூழலில் தீபாவளியை கொண்டாடுங்கள் – மாநில முதல்வர்

Admin

 

ஜார்ச்டவுன் – வருகின்ற நவம்பர்,9 தொடங்கி டிசம்பர்,6 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றி விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை மிதமான சூழலில் கொண்டாட வேண்டும் என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் வலியுறுத்தினார்.

இன்று தேசிய பாதுகாப்பு மன்றத்தில் பெர்லிஸ், கிளாந்தான் மற்றும் பஹாங் மாநிலத்தை தவிர்த்து தீபகற்பத்தில் உள்ள பிற அனைத்து மாநிலங்களிலும் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து மாநில முதல்வர் இவ்வாறு கருத்துரைத்தார்.

“தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பினாங்கு மாநில மக்கள் தற்போதைய சூழ்நிலையில் இந்த நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

” இந்த அமலாக்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போன்று இல்லாமல் இந்த நிபந்தனைக்கு உட்பட்ட ஆணையில் பொருளாதார நடவடிக்கைகள் தொடரலாம். ஆனால், மத சார்ந்த நடவடிக்கைகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையைப் (எஸ்.ஓ.பி) பின்பற்றி நடத்தப்பட வேண்டும்,” என்று மாநில முதல்வர் பினாங்கு லிட்டல் இந்தியாவில் வசதிக்குறைந்த குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு விவரித்தார்.

பினாங்கு மாநில பாதுகாப்புக் குழு தலைவருமான சாவ் இன்று அறிவிக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பற்றிய தகவல் முன்கூட்டியே மாநில அரசிடம் தெரிவிக்கப்படவில்லை என விவரித்தார்.

இதற்கிடையே, வருகின்ற திங்கட்கிழமை நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான எஸ்.ஓ.பி அமலாக்கம் தொடர்பில் விவாதிக்கப்படும் என்று மேலும் விவரித்தார்.