செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகமாக (எம்.பி.எஸ்.பி) உருமாற்றம் கண்டதைத் தொடர்ந்து ‘நிலையான செபராங் பிறை மாநகரை நோக்கிய வியூக இலக்கு உருவாக்கத் திட்டம்‘ துவக்க விழாக்கண்டது.
இந்த குறுகியக் கால திட்ட ஆவணங்களை வீடமைப்பு, உள்ளூராட்சி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். மாநகர் கழக உருமாற்றத்தின் மூலம் இவ்வட்டார மக்களுக்கு நன்மை பயக்கும் பொருட்டு இந்த மூன்று மாத குறுகியக்கால திட்ட ஆவணங்களில் 18 திட்டங்கள் மற்றும் ஆறு புதிய வழிக்காட்டல் வரையறுக்கப்பட்டுள்ளன.
“இந்த வியூக இலக்கு உருவாக்கத் திட்டத்தில் வருகின்ற 2020-ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 70 விழுக்காடு உணவு வளாகங்கள் கிரேட் ‘ஏ‘ மற்றும் 30 விழுக்காடு கிரேட் ‘பி‘ பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். அதேவேளையில், பொதுச் சந்தைகளிலும் தூய்மை 50 விழுக்காடு கிரேட் ‘ஏ‘-வும் மீதமுள்ள 50 விழுக்காடு கிரேட் ‘பி‘ பெற இலக்கு கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநகர் கழகத் தலைவர் (டத்தோ பண்டார்) டத்தோ ரொசாலி முகமது, மாநகர் கழக உறுப்பினர்கள் மற்றும் மாநகர் செயலாளர் ரொஸ்னானி முகமது கலந்து கொண்டனர்.
“உரிமம், சுகாதாரம் அல்லது தர அளவிலான விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு உணவு வளாகத்தையும் மூடுவதற்கு எம்.பி.எஸ்.பி–க்கு அதிகாரம் அளிக்க சில துணை சட்டங்கள் திருத்தம் செய்யப்படும்” என ஆவணம் வெளியீட்டு விழாவிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.
மேலும், குறைந்த வருமானம் பெறும் ‘பி40′ குழுவினர் மற்றும் நடுத்தர வர்க்கம்(எம் 40) மக்களை மையமாகக் கொண்ட திட்டத்தின் கீழ் உள்ளூர் பொருளாதார மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஜெக்டிப் விளக்கமளித்தார்.
எம்.பி.எஸ்.பி இந்நகரத்தை குறைந்த கார்பன் நகரமாக உருவாக்கும் நோக்கில் பசுமைப் போக்குவரத்து, பசுமைக் கட்டிடம், பசுமை உள்கட்டமைப்பு, நிலையான உற்பத்தி மற்றும் பல்வேறு உத்திகளை செயல்படுத்த உத்வேகம் கொள்கிறது.
எம்.பி.எஸ்.பி மாநகர் கழகமாக பெயரில் மட்டுமின்றி செபராங் பிறை பொது மக்கள் விரும்பும் சிறந்த நகரமாக உருமாற்றம் காண முற்படும் என ரொசாலி குறிப்பிட்டார்.
ஆறு புதிய வழிக்காட்டலில் குறிப்பாக ‘உணவு டிரக்குகள்‘(Food Track) , வாகன கழுவும் மையம், குறிப்பிட்ட காலவரையிலான உரிமம், தற்காலிக வணிக உரிமம், சாலை விளக்குகள் நிறுவல் மற்றும் மிதிவண்டிக்கான சாலை அமைத்தல் ஆகியவை இடம்பெறும்.