பாயான் லெப்பாஸ்– அண்மையில் பினாங்கு மாநாகர் கழகம் மற்றும் பட்டர்வொர்த் மீட்புப்படை சங்க இணை ஏற்பாட்டில் நடைபெற்ற அடிப்படை நீச்சல் மற்றும் நீர் பாதுகாப்புப் பயிற்சி திட்டம் 7 முதல் 12 வயது மதிக்கத்தக்க பி40 குழுவினைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
“இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் மத்தியில் நீரில் மூழ்கும் வழக்குகளைக் குறைத்தல் மற்றும் தனியார் நிறுவன ஏற்பட்டில் இடம்பெறும் நீச்சல் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே தலையாய நோக்கமாகத் திகழ்கிறது,” என மாநகர் கழக உறுப்பினர் கேரல்டு மாக் முன் கியோங் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குறிப்பாக நீர் நடவடிக்கை பிரியர்களுக்கு ஒரு பயனுள்ள நடவடிக்கையாகவும், மேலும் நீர் பாதுகாப்பு பற்றிய பொது அறிவும் வளர்க்க முடியும்.
“மாணவர்கள் நீச்சல் அடிக்கும் திறமையை வளர்த்துக் கொள்வதோடு விளையாட்டுத் துறையில் குறிப்பாக நீச்சல் போட்டியில் அதிக ஈடுபாடு கொள்ள இத்திட்டம் வழிவகுக்கும்,” என ரெலாவ் விளையாட்டு அரங்கத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநகர் கழக உறுப்பினர்களான காளியப்பன் மற்றும் லத்திப்பா உசாய்ன்சா, மாநகர் கழக சமூக பொதுச் சேவை இயக்குநர் ராஷிடா ஜாலாலுடின் மற்றும் பட்டர்வொர்த், பாதுகாப்பு மீட்புப்படைக் கழகப் பயிற்றுனர் தான் குவான் லிங் கலந்து கொண்டனர்.
பொது மக்களிடம் வற்றாத ஆதரவு கிடைக்கப்பெற்றால் அடுத்த ஆண்டும் இத்திட்டம் தொடங்கப்படும் என மேலும் தெரிவித்தார். இத்திட்டத்தில் 60 மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நீச்சல் பயிற்சியில் கலந்து கொண்டனர்.